Ad Widget

பரு. பிரதேச சபையின் உபஅலுவலகம் அம்பனில் செயற்பட ஆரம்பித்தது

பருத்தித்துறை பிரதேசசபை குடத்தனை உப அலுவலகம் 13 வருட கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அம்பனில் கடந்த வாரம் முதல் செயற்பட ஆரம்பித்துள்ளது.

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் குடத்தனை 11 வட்டாரங்களைக் கொண்ட கிராம சபையாக இருந்த போது இதன் அலுவலகம் அம்பன் அரசினர் கிராமிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்து வந்தது.

கிராம சபை நீங்கி அபிவிருத்தி சபையாகவும் பின்னர் பிரதேச சபையாகவும் மாற்றமடைந்த போது குடத்தனை கிராம சபை உப அலுவலகமாக மாறி பருத்தித்துறை பிரதேசசபையின் கீழ் இயங்கி வருகிறது.

பருத்தித்துறை பிரதேச சபையின் குடத்தனை உபஅலுவலகம் கடந்த கால இராணுவ நடவடிக்கை காரணமாக 13 வருடங்களுக்கு முன்னர் கைவிடப்பட்டது. அலுவலகம் இருந்த அம்பன் பகுதி நாகர்கோவில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அடங்கியிருந்தது.

போர் முடிவுக்கு வந்த பின்னர் உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டு நாகர்கோவில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டனர். இதன்போது அம்பன், குடத்தனை, உப அலுவலகக் கட்டடமும் படையினரால் கைவிடப்பட்டது.

சேதத்துக்கு உள்ளான அலுவலக வளவுக்குள் நிறுவப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் குடத்தனை உப அலுவலக எல்லைக்குள் வசிக்கும் மக்கள் இங்கு சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பருத்தித்துறை பிரதேசசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 13 வருடகால இடைவெளியில் குடத்தனை உபஅலுவலகப் பணிகள் சிலகாலம் மந்திகையிலுள்ள பருத்தித்துறை பிரதேசசபையிலும், மற்றும் சிலகாலம் மணற்காட்டுச் சந்தியிலுள்ள குடத்தனை பொது நூல் நிலையத்திலும் தற்காலிகமாக இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts