Ad Widget

பருத்தித்துறை பிரதேச சபையின் வரவு – செலவு திட்டம் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் இல்லையேன குற்றச்சாட்டு

பருத்தித்துறை பிரதேச சபையின் 2013ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் பூபாலசிங்கம் சஞ்சீவன் தலைமையில் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

அடிப்படை அபிவிருத்தி, வசதியான குடிநீர், சுகாதாரம், வீதிப் புனரமைப்பு, மீள்குடியேற்றப் பகுதிக் கிராமங்களின் வீதிகள் புனரமைப்பு என்பன புறக்கணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில் போன்ற கிராம சேவகர்கள் பிரிவிலிருந்து ஒரு வீதி கூட 2013ஆம் ஆண்டின் திட்டத்தில் புனரமைப்பிற்காகச் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

சுனாமி ஆழிப்பேரலையால் அழிவுகளைச் சந்தித்த கிராமங்களின் உள்ளக வீதிகள் ஒன்று கூட சம்பிரதாயத்திற்காகவாவது சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 2012ஆம் வருட வரவு செலவுத் திட்டத்தில் இணைக்கப்பட்ட வீதிகளின் வேலைத்திட்டங்கள் காகித அச்சுடன் காணாமல் போயுள்ளதாகவும் எதிர்க்கட்சியினரால் குற்றஞ்சாட்டப்பட்டன.

இதன்போது, 31.05.2012. திகதி இடம்பெற்ற மாதாந்தக் கூட்டத்தில் கெருடாவில் சந்தைக்கான வேலி மற்றும் குழாக்கிணறு, குடிநீர் வசதி விரைந்து செய்து கொடுப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததுடன், பிள்ளையார் குடியேற்ற வீதி, செம்பாட்டு வீதி, மாதர் சங்க வீதி, இளம்பிறை சனசமூக நிலையத்தால் கோரப்பட்டிருந்த வீதி வேலைத்திட்ட முன்மொழிவுகள், வராத்துப்பளை இறைதுவரையடி – ஐயன்கோவில் திருத்தம், சோழ கிணற்றடி பாலையடி வீதி திருத்தம், சண்டங்கியோலை வீதித் திருத்தம் மற்றும் சோழியவத்தை நரசிம்ம ஆலய வீதி, கூவில் வீதி அடுத்த ஆண்டுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்வதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

சபையில் தீர்மானிக்கப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட அத்தீர்மானங்கள் 2013 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மாணாண்டிச் சந்தையின் குடிநீர் வசதி, செம்பியன்பற்று உப அலுவலகத்தில் ஆயுள்வேத மருந்தகம் வசதியை செய்து கொடுக்குமாறு பல தடவை கோரிக்கைகளை முன்வைத்தபோதும் அக்கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் கூட்டத்தின் போது சுட்டிக் காட்டப்பட்டன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இச்சபை மக்களுக்கான சபையாக இல்லாமல், கட்சிக்கான சபையாகவே செயல்படுகிறது. தமிழரசுக்கட்சியின் தலைமை தமது ஆதிக்கத்திற்கு உட்பட்ட பிரதேச சபைகளின் உபதவிசாளர்களுக்கு சுகாதாரம் தொடர்பான பொறுப்பை வழங்குமாறு, பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

Related Posts