Ad Widget

பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளுக்கு தடை!!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கோவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.

பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகி கடும் ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராயந்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன், பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்று தடை உத்தரவு வழங்கி கட்டளை வழங்கினார்.

பேரணியில் பங்கேற்போர் பல மாவட்டங்கள் ஊடாக அங்குள்ளவர்களையும் இணைத்து வருவதனால் கோவிட் -19 நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த தடை உத்தரவு வழங்கப்படுகிறது என்று நீதிவான் கட்டளையில் சுட்டிக்காட்டினார்.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Related Posts