பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி இன்று (25) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை எட்டு மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து போராட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டு பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்றிருந்ததுடன் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
பருத்தித்துறை துறைமுகப் பகுதி மற்றும் வெளிச்ச வீட்டடியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி பொது அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.
பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்துக்குச் சொந்தமான நிலம் மற்றும் தபால் நிலையத்துக்குச் சொந்தமான கட்டடம் என்பவற்றை ஆக்கிரமித்து பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தபால் நிலையம் பிறிதொரு கட்டடத்தில் இயங்கி வருவதுடன் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தை பருத்தித்துறை நகருக்கு வெளியே இடம்மாற்றுவதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.