Ad Widget

பருத்தித்துறையில் மீன்பிடித்துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு!

பருத்தித்துறை, கொட்டடி பகுதியில் மேலதிக துறைமுகம் ஒன்றினை அமைப்பதற்கு மீனவ குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தமது தொழில் பாதிக்கப்படுமெனவும் மாற்று இடத்தில் துறைமுகத்தினை அமைப்பதற்கான இடத்தினை தெரிவு செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

துறைமுக அபிவிருத்தி தொடர்பாக கடற்றொழில் அமைச்சு மற்றும் துறைமுக அபிவிருத்தி திணைக்களம் உட்பட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைந்து பருத்தித்துறை, கொட்டடி சனசமூக நிலையத்தில் மீனவ சங்கங்கள், மீனவ குடும்பங்களுடன் நேற்று(வெள்ளிக்கிழமை) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலின் போது, துறைமுக அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான இடம் அதற்கான தரப்படுத்தல்கள் போன்றன காணொளிகள் மூலம் மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.

இது குறித்து பொதுமக்கள் மேலும் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை துறைமுகம் இருக்கும் போது, மற்றொரு துறைமுக அபிவிருத்தி செயற்பாட்டிற்காக அன்றாடம் தொழில் செய்யும் இடத்தினை தருமாறு கோருவதனை ஏற்க முடியாது.

இந்த இடத்தில் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டால், உள்ளுர் மீனவர்களின் படகுகள் நிறுத்த முடியாது. தாம் எங்கு சென்று தொழிலை மேற்கொள்வது என்றும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் மாற்றுத் துறைமுகம் அவசியமில்லை எனவும் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், தாம் சொல்லும் இடத்தில் இந்த அபிவிருத்தி மேற்கொள்ளுமாறும், மக்கள் அதிகாரிகளிடம் சுட்டிக் காட்டினார்கள். இருந்தும், கலந்துரையாடலில் எந்த முடிவுகளும் எட்டப்படாத நிலையில் கூட்டம் நிறைவு பெற்றது.

மீண்டும், கடற்றொழில் திணைக்களம் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள், மீனவ குடும்பங்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவுகளை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சும், துறைமுக அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts