Ad Widget

பரீட்சைப் பெறுபேறுகள் நம்பிக்கையளிக்கின்றன: வடக்கு முதலமைச்சர்

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், வடபகுதி கல்விநிலையில் பழைய நிலைக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றோம் என்பதை வெளிப்படுத்துவதாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘2017ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்துவிட்ட நிலையில் வடபகுதி மாணவர்களில் குறிப்பிட்ட பகுதியினர் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று முன்னிலை வகிப்பது வாழ்த்துக்குரியது.

அதே போன்று கணிதத்துறையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற தமிழ் மாணவனின் அயரா உழைப்பும் புத்திக் கூர்மையும் பாராட்டுக்குரியது. நாம் எமது பழைய நிலைக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றோம் என்பது புலனாகின்றது.

தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்ற அதே நேரம் 03 பாடங்களில் சித்தி பெற்றும் பல்கலைக்கழகங்களிற்கு தெரிவாகாத பல நூற்றுக் கணக்கான மாணவ மாணவியரில் ஒரு சிலர் இரண்டாவது தடவை பரீட்சைக்காக தம்மைத் தயார் செய்கின்றனர்.

ஏனைய மாணவர்கள் எதிர்காலம் பற்றிய எந்த வித ஆக்க பூர்வமான வழிமுறைகளும் தெரியாத நிலையில் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றார்கள். இதனை நான் புதன் கிழமைகளில் மக்களைச் சந்திக்கும் போது அவதானித்து வருகின்றேன். மிகச் சொற்ப மாணவ மாணவியர் தவறான முடிவுகளுக்குக்கூட சென்று விடுவது வேதனையளிக்கின்றது.

மாணவ மாணவியர் தாம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 80மூ புள்ளிகளுக்கு மேல் பெறுகின்ற மாணவர்களே தப்பிப் பிழைப்பர், ஏனைய மாணவர்கள் வேலைவாய்ப்பை இழந்தவர்களாக மாற்றப்படுவார்கள் என்ற தவறான கருத்தை தங்கள் மனதில் இருந்து அகற்றிக் கொள்ள வேண்டும்.

எந்தத் துறை மீது ஆர்வம் இருக்கின்றதோ மாணவ மாணவியர் அந்தத் துறையில் தொடர்ந்து கற்பதற்கும் முன்னோக்கிப் பயணிப்பதற்கும் உயர்ந்த பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் வழிவகுக்கக்கூடிய கல்வித் துறைகளை தேர்ந்தெடுக்க முன் வர வேண்டும்.

எமது எல்லா மாணவ மாணவியரின் எதிர்காலமும் சிறப்புற விளங்க ஆசீர்வதிக்கின்றேன்’ என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts