Ad Widget

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும்: வடக்கு முதல்வர்

இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும் எனவும், காணாமல் போனவர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைக்க இருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தை நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வடமாகாண முதலமைச்சர் தனது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்தச் சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து குறிப்பிடுகையில்,

காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளை கண்டோம் என கூறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் தகவல் பெற்று உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் அரசாங்கத்தை கோருவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.

இதேபோல் வவுனியா ஜோசப் ராணுவ முகாமில் என்ன இருக்கிறது? காணாமல்போனவர்கள் அங்கே இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா? என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும், எனவும் அரசாங்கத்தை கோருவதற்கும் தீர்மானித்திருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளை தாங்கள் நேரடியாகவும், உறவினர் நண்பர்கள் ஊடாகவும், ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் ஊடாகவும் பார்த்திருப்பதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார துண்டுபிரசுரத்தில் உள்ள புகைப்படத்தில் தனது மகள் உள்ளதாக ஒரு தாய் கூறியிருக்கின்றார்.

எனவே இவ்வாறானவர்களிடம் தகவல்களை பெற்று விசாரணைகளை நடத்தி உண்மையை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்கவுள்ளோம்.

அதேபோல் பரணகம ஆணைக்குழு என ஒரு ஆணைக்குழு உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட 19 ஆயிரம் பேரிடம் அந்த ஆணைக்குழு வாக்குமூலங்களை பெற்றுள்ளது.

ஆனால் அந்த ஆணைக்குழவின் அறிக்கை வெளியாகவில்லை. எனவே அந்த அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கோரவுள்ளோம்.

வவுனியா ஜோசப் இராணுவ முகாமில் என்ன நடக்கிறது? காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவினர்கள் வவுனியா ஜோசப் தடுப்பு முகாமில் தடுத்துவை க்கப்பட்டிருக்கலாம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றார்கள்.

எனவே அங்கே என்ன உள்ளது? காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா? என அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கோருவதற்கு தீர்மானித்துள்ளோம்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானத்தை சரியாக நடைமுறைப்படுத்துகின்றதா? என ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் அவதானிக்க வேண்டும் என அவர்களிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளோம் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

Related Posts