வடக்கில் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவினர் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடுபர்களாக இருப்பின் அவர்கள் இலங்கையின் பாரிய குற்றங்களுக்கான சட்டங்களின் கீழ் தண்டிக்கப்படலாம். அதைவிடுத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதானது தேவையற்றதாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் தொடரும் கைதுகள் தொடர்பிலும் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது குறித்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ‘இலங்கையில் பாரிய குற்றங்களுக்காகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை.
வடக்கில் இயங்கும் ஆவாக் குழு, பாரிய குற்றச்சாட்டுடன் தொடர்புபட்டிருப்பின் இலங்கையிலுள்ள பாரிய குற்றங்களுக்கான சட்டங்களின் கீழ் அவர்கள் கைது செய்யப்படலாம். தண்டிக்கப்படலாம். அவ்வாறான குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர்கள் மீதான நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம்.
ஆனால், இவ்வாறான குற்றச் சாட்டுக்களுக்காக அவர்களைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, 16 மாதங்கள் எவ்வித விளக்கமும் இன்றி தடுத்து வைத்தல் மற்றும் அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு வாய்மொழி மூல அறிக்கையைத் தயாரித்து அதன் பின்னர் பத்து வருடகாலம் அவர்களின் வழக்கை இழுத்தடிப்பது செய்தல் என்பன தேவையற்றவையாகும்.
இது மனித குலத்திற்கு ஒவ்வாததொரு செயலாகும்’ எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.