Ad Widget

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர் விடுதலை

judgement_court_pinaiபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட வேலணை சரவணை மேற்கினைச் சேர்ந்த மகாலிங்கம் ஜனகன் (36) என்பவர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரினால் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

1999ஆம் ஆண்டு ஆனையிறவுப் பகுதியில் இராணுவத்தினருக்கு எதிராகக் தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவான் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, வவுனியா பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.

தொடர்ந்து இவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ். மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வவுனியா பூஸா முகாமில் வைத்து, அங்கிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் ஜனகனால் அளிக்கப்பட்ட குற்றஒப்புதல் வாக்குமூலம் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த நபருக்கு எதிரான வேறு சான்றுகள் உள்ளனவா என பரிசீலனை செய்து பார்ப்பதற்காக நேற்று திங்கட்கிழமை வரை (27) மேற்படி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து மேற்படி வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறித்த நபருக்கு எதிராக வேறு சான்றுகள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் அவரை விடுதலை செய்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

குறித்த நபர் சார்பாக சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ் மன்றில் ஆஜராகியிருந்தார்.

Related Posts