Ad Widget

பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி எப்போதும் அவதானமாக இருக்கவேண்டும் – பிரதமர் எச்சரிக்கை

“பயங்கரவாதம் என்பது புற்றுநோய் போன்றது. ஒன்று முடிந்தது என்று நாம் அமைதியாக இருந்துவிட முடியாது. நாம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். நாம் நினைக்க முடியாதவற்றை அவர்கள் செய்வார்கள். ஆயுதம் என்பது துப்பாக்கி மட்டுமல்ல. சிறிய கத்தியும் ஆயுதம்தான். வாகனங்களைக் கொண்டு மக்கள் மீது மோதி ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். நாங்கள்தான் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று செவ்வாயக்கிழமை மாலை 6.10 அளவில் தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையானார். முன்னதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவும் சாட்சியமளித்திருந்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது சாட்சியத்தில் தெரிவித்ததாவது:

சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஊடாகவும் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவும் தேசியப் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் எனக்கு கிடைத்து வந்தன. எனினும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து எந்த புலனாய்வுத் தகவலையும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு பெற்றுக்கொள்ளவில்லை.

காத்தான்குடியில் அடிப்படைவாதம் இருப்பதை அரசியல் தலைவர் என்ற வகையில் அறிந்திருந்தேன். துருக்கி அமைப்பு ஒன்று அங்கு இருப்பதாகவும் தகவல் கிடைத்திருந்தது. எனினும் அந்த அமைப்பால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவிக்கப்படவில்லை.

தேசியப் பாதுகாப்பு சபையில் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகள் பங்கேற்பார்கள். தேவையேற்பட்டால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும் அழைப்படுவார்.

இந்த ஆண்டு பெப்ரவரிக்குப் பின்னர் பாதுகாப்புச் சபை கூட்டப்படவில்லை. ஆர்ப்பாட்டங்கள், அடிப்படைவாதம், விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி பற்றிய தகவல்கள் எனக்கு வழங்கப்பட்டு வந்தன. எனினும் பயங்கரவாத அமைப்பு – தாக்குதல்கள் பற்றி எவையும் எனக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. எனது பாதுகாப்புப் பிரிவுக்கும் அது வெளிப்படுத்தப்படவில்லை.

சஹ்ரான் காசிமை கைது செய்வதற்கான நடவடிக்கையை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் 2018ஆம் ஆண்டே முன்னெடுத்திருந்தனர். எனினும் அவர் வெளிநாட்டுக்குத் தப்பித்துவிட்டார் என்ற அடிப்படையிலேயே பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

சட்டம் ஒழுங்கு அமைச்சு என்னிடம் 2 வாரங்கள் மட்டுமே இருந்தது. பயங்கரவாத அமைப்புக்களைத் தடை செய்து அந்த அமைப்புக்களைச் சேர்ந்தோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான சட்டங்கள் இயற்றப்படவில்லை என்பதுதான் எனது கருத்து.

மதரசா பாடசாலை தொடர்பில் ஒரு ஒழுங்குமுறை இருக்கவில்லை. வெளியில் இருந்து வந்தவர்களே தாக்குதல்களை நடத்தினார்கள் என்ற விடயம் தாக்குதல்களின் பின்னரே தெரிய வந்தது. அவை பற்றி அமைச்சரவையில் நாம் கலந்துரையாடியுள்ளோம்.

தாக்குதல்கள் நடத்தப்பட்டவுடன் பாதுகாப்புச் சபையை நான் கூட்டினேன். பாதுகாப்பு அமைச்சுக்கு நேரில் சென்று பாதுகாப்புச் சபையைக் கூட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்புவிடுத்தேன்.

பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் சிலவற்றுக்கு எனக்கு அழைப்புக் கிடைக்கவில்லை. நான் பாதுகாப்புச் சபைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் பாதுகாப்புச் சபை கூடியிருக்க முடியாது. எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் பல வாரங்களாக பாதுகாப்புச் சபை கூட்டப்படவில்லை என்று அறிந்துகொண்டேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சில நாள்களுக்கு முன்னர் காத்தான்குடியில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக அறிந்துகொண்டேன். அதுபற்றி விசாரணை நடத்தச் சொன்னேன். எனினும் அதுபற்றி எனக்கு எந்த விவரங்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

நாட்டின் பாதுகாப்புத் துறையில் ஒழுங்கான கட்டமைப்பு இல்லாமை காரணத்தினால்தான் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைத்து விசாரணை நடத்தத் தீர்மானித்தோம்.

சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு அனுபவம் வாய்ந்த ஒருவர் நியமிக்கப்படவேண்டும். அதனை நாம் வலியுறுத்தியும் இருந்தோம்.

அடிப்படைவாதம் மூலம்தான் பயங்கரவாதத்துக்கு மாறுகின்றனர். இந்த இரண்டுக்கும் இடையே உள்ள காலத்தை புலனாய்வுத் துறை கண்டறியவேண்டும். அதனை எமது புலனாய்வுத் துறை உரியவாறு முன்னெடுக்கவேண்டும். எனினும் புலனாய்வுத் துறை அதனைத் தவறவிட்டமை பாரதூரமான குறைபாடாகும்.

இந்த பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேரடி தொடர்பில் மட்டும் அல்ல, என்ன வகையிலேனும் தொடர்பு பட்ட நபர்கள் என்றால் அவர்களை கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என கோரியுள்ளோம்.

ஒரு குழு அழிக்கப்பட்ட காரணத்தினால் பிரச்சினை முடிந்ததாக கூற முடியாது. இது புற்றுநோய் போன்றது. ஒரு குழு முடிந்துவிட்டது என திருப்திகொள்ள முடியாது. வேறு யார் உள்ளனர் என்பதை கண்டறிய வேண்டும். யாரின் கொள்கை உருவாகின்றது. ஆயுதம் என்பது துப்பாக்கி மட்டும் அல்ல வேறு எதனையும் பயன்படுத்த முடியும்.

புதிய பயங்கரவாத யுகத்தில் உள்ளதாக் அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும். தனி நபரால் கூட முடியும். இது புற்றுநோய் போன்றது ஆகவே இதில் நாம் அவதானமாக இல்லாத நிலையில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இன்று நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் சீராக உள்ளது. சோல்பரி அரசியல் அமைப்பில் இருந்தே அமைதியையும் நல்லாட்சியையும் வலியுறுத்தியுள்ளனர். பின்னர் நாம் அதனை நீக்கிவிட்டோம். ஆனால் முதலில் அமைதியான சூழலும் நல்லாட்சியும்தான் வேண்டும்.

இது புற்றுநோய் ஆகவே இது முடிவுக்கு வராத வகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். சஹ்ரான் தமிழில் பரப்புரை செய்வதால் இலங்கைக்கு மட்டும் அல்ல தென்னிந்தியாவிற்கும் பெரும் அச்சுறுத்தல். ஆகவே தான் அவர்கள் அக்கறை செலுத்துகின்றனர் – என்றார்.

Related Posts