Ad Widget

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கடந்த மாதம் 23பேர் கைது!

நல்லாட்சி எனக்கூறும் இந்த அரசாங்கத்தில்கூட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கடந்த மாதம் மட்டும் இருபத்துமூன்றுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வடக்குக் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இதில் மூன்றுபேரைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் பூசா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அண்மையில் சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பாகவுமே கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எத்தனைபேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விபரத்தை காவல்துறையினர் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தாத நிலையில் அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மட்டும் பதினொருபேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் அவர் வவுனியாவில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

ஏனைய பத்துப்பேரில் இருவர் கொழும்பு நாலாம் மாடியில் வைத்து விசாரணைசெய்யப்பட்டு வருவதாகவும், மிகுதிப்பேர் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் வடக்குக் கிழக்கினைச் சேர்ந்தவர்களே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், கைது செய்யப்பட்டவர்கள் எதற்காக கைதுசெய்யப்பட்டார்கள் என்ற விபரத்தை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts