Ad Widget

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தல்

தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலுமின்றி, மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதை தடுக்கும் வகையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

கடந்த தசாப்த காலங்களில் இச்சட்டத்தினூடாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை விசாரிப்பது மாத்திரமின்றி, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை எவ்வாறு தயாரிப்பது என்பதை அரசாங்கத்திற்கு அறிவுறுத்துவதும் தமது ஆணைக்குழுவின் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”தயாரிக்கப்பட்டுவரும் தேசிய பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். இந்த சட்டமூலங்கள் விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில் உள்ளனவா என்பதை ஆராய்வதற்கு முன்கூட்டியே வழங்கப்படாமை நாம் எதிர்நோக்கும் பாரிய சவாலாகும்.

எனவே, சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு முன்னர் அவற்றை ஆய்வு செய்வதற்கு ஆணைக்குழுவிடம் வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கோருகின்றோம்” எனத் தெரிவித்தார்.

Related Posts