Ad Widget

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும்- சுரேஷ்

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக தெற்கு அரசியல்வாதிகளும் மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கொடுமையை இன்றளவிலும் தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

இன்று அந்த சட்டம் ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கும் நாட்டின் இதர பகுதியினரையும் விட்டுவைக்கவில்லை.

இந்நிலையில் இந்த சட்டத்தை இப்பொழுது நடைமுறைப்படுத்துவது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் உலகநாடுகளிடமிருந்து இலங்கை தனிமைப்பட்டுவிடும் என்றும் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறியிருக்கிறார்.

அவரது கூற்றிலிருந்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு இன்னமும் தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு மனம் வரவில்லை என்பதும் கடந்தகாலத்தில் தவறுகள் நடந்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம் அதைத் திருத்திக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை என்பதும் தெளிவாகின்றது.

எனவே நாட்டை முன்னேற்ற விரும்பினால் கடந்தகால தவறுகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு அதை நிவர்த்தி செய்ய தென்னிலங்கை அரசியல்வாதிகள் முன்வரவேண்டும்.

தமிழ் மக்களுக்கு எதிராக இந்த காட்டுமிராண்டிச் சட்டம் ஏவிவிடப்பட்டபொழுது, சிங்கள அரசியல் தலைவர்களோ, பொது அமைப்புகளோ, தொழிற்சங்கங்களோ யாருமே அதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை.

ஆனால் இந்தக் கொடிய சட்டத்தின்கீழ் நாட்டின் ஜனநாயகத்திற்காகவும் ஊழலை எதிர்த்தும் போராடுகின்ற மக்களை கைதுசெய்கின்றபொழுது குறைந்தபட்சம் இந்த சட்டத்திற்கெதிரான குரல் தென்பகுதியில் எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது.

எம்மைப்பொறுத்தவரையில் அன்றும் சரி இன்றும்சரி இந்தக் காட்டுமிராண்டித்தனமான சட்டம் அகற்றப்படவேண்டுமென்பதில் தமிழ் மக்களாகிய நாம் உறுதியாக இருக்கின்றோம்.

ஆனால், இங்கு நகைப்புக்குரிய விடயம் என்னவெனில் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பிரயோகிப்பது பிழை என்றுக் கூறியுள்ளார்.

மேலும், உலகநாடுகள் அதனை ஏற்றுக்கொள்ளாது என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் இலங்கைக்கு எதிராக காட்டமான தீர்மானத்தை நிறைவேற்ற அது வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ள அவர், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இப்பொழுது பாவிக்கக்கூடாது என்றும் கூறியிருக்கின்றார்.

அவரைப் பொறுத்தவரையில் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தற்காலிகமாகவேணும் தப்புவதற்கு ஆலோசனைகளை முன்வைக்கின்றாரே தவிர, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்கும்படி அவர் கூறவில்லை.

ஜனநாயகத்தின்மீதும் மனித உரிமைகள்மீதும் அக்கறை கொண்டவர்களும், அமைதி, சமாதானத்தை விரும்பக்கூடிய எவரும் இத்தகைய காட்டுமிராண்த்தனமான சட்டத்தை ஏற்க மாட்டார்கள்.

ஜனநாயகப் போராட்டங்களுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய்கின்ற இத்தருணத்திலாவது சிங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள மனித உரிமை ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரும் இத்தகைய சட்டங்களுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும் என்று கோருகின்றோம்.

தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் ஊழல் மலிந்த அரசுகளைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இவ்வாறான சட்டங்கள் என்ன வடிவத்தில் என்ன பெயரில் வந்தாலும் அவை முற்றுமுழுதாக நிராகரிக்கப்படவேண்டும் என்றும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்.- எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts