Ad Widget

பன்னங்கண்டியில் ஆரம்பமானது மற்றுமொரு கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி – பன்னங்கண்டி சிவா பசுபதி கிராம மக்கள் முன்னெடுத்துவந்த போராட்டம் தீர்வுடன் முடிவுற்றிருக்கும் நிலையில், தற்போது அங்குள்ள வேறு இரு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காணி உரிமை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சரஸ்வதி கிராமம் மற்றும் ஜொனி குடியிருப்பு ஆகியவற்றைச் சேர்ந்த மக்கள் நேற்று ஆரம்பித்த இப் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த இம் மக்களுக்கு கடந்த 1990ஆம் ஆண்டு விடுதலை புலிகளால் இங்குள்ள காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட போதும், காணி உரிமை இல்லாத காரணத்தால் இம் மக்களுக்கான வீட்டுத்திட்டம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் சிக்கல் நிலை காணப்படுகிறது. மீள்குடியேற்றத்தின் பின்னர் வழங்கப்பட்ட தகரக் கொட்டில்களிலேயே இம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பசுபதி கிராமப் பகுதியில் சுமார் 65 குடும்பங்களை சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட மக்களும், சரஸ்வதி கிராமத்தில் 106 குடும்பங்களை சேர்ந்த 400இற்கு மேற்பட்ட மக்களும், ஜொனி குடியிருப்பு என அழைக்கப்படும் பகுதியில் 16 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 60இற்கு மேற்பட்டவர்களும் இவ்வாறு வாழ்ந்து வருகின்றனர்.

இதில் முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதிக்கு உரித்தான 33 ஏக்கர் காணியில் சுமார் 18 ஏக்கர் காணியில் 65 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அதேபோன்று சரஸ்வதி என்பவருக்கு உரித்தான 47 ஏக்கர் காணியில் சுமார் 30 ஏக்கரில் இவ்வாறு மக்கள் வாழ்ந்து வரும் அதேவேளை ஜொனி குடியிருப்பு என அழைக்கப்படும் கிராமத்தில் 16 குடும்பங்கள் வாழ்கின்றன. குறித்த காணிகள் ஒதுக்கீட்டு காணிகளாகவும் காணப்படுகின்றன.

இதில் சிவா பசுபதி கிராம மக்கள் முன்னெடுத்திருந்த போராட்டத்தின் விளைவாக அம் மக்களுக்கு காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டு, கடந்த வாரம் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், ஏனைய கிராம மக்களும் தமக்கு காணி உரித்து வழங்கப்பட வேண்டுமென கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts