Ad Widget

பனை மரங்களைப் போதைக்கு மட்டுமே பயன்படுத்துவது தமிழ் மக்களின் பேதைமை- பொ.ஐங்கரநேசன்

பனை மரங்களை நாம் கள்ளையும் வடிசாராயத்தையும் பெறுவதற்குரிய ஒரு வளமாக மாத்திரமே கருதி வருகிறோம். பல்வேறு பரிமாணங்களில் பொருளாதாரரீதியாக உதவக் கூடிய பனை மரங்களை, போதைக்கு மட்டுமே பயன்படுத்துவது தமிழ் மக்களின் பேதைமை என்று வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக் காட்டியுள்ளார்.

மன்னார், நானாட்டான் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்புவிழா சனிக்கிழமை (27.06.2015) நடைபெற்றது. இத்திறப்புவிழா நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டிடத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக் காட்டியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

உலக நாடுகள் தங்கள் இயற்கைத் தாவரங்களில் பிரதானமானவற்றை அடையாளம் கண்டு, அவற்றை மூல வளமாகப் பயன்படுத்தித் தங்கள் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து வருகின்றன. ஆனால், இயற்கை எமக்கு கொடையாகத் தந்த பனைவளத்தை நாம் இன்னமும் உச்சப் பயன்பாட்டுக்கு உட்படுத்தவில்லை. பனையைத் தொழில் ஆதாரமாகக் கொண்டவர்களை ஒரு காலத்தில் தீண்டாத்தகாதவர்களாக ஒதுக்கி வைத்ததைப் போன்றே பனைமரங்களையும் இன்று ஒதுக்கி வருகிறோம்.

பனை தமிழர்களின் தேசியச் சொத்து. எமது அடையாளமும் பொருளாதாரப் பலமும் பனைவளம்தான். ஆனால், பனை என்பது இன்று கள்ளின் அடையாளமாக மட்டுமே உள்ளது, பனையைத் தொழில் ஆதாரமாகக் கொண்டவர்களும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களாகவே உள்ளார்கள். இந்நிலை மாற வேண்டும். ஒருபுறம் போதைப்பொருளுக்கு எதிராகப் போராடிக்கொண்டு, இன்னொருபுறம் கள்ளினதும் வடிசாராயத்தினதும் பாவனையை ஊக்கவிப்பது ஏற்புடையதாகாது. இது தொழில்நுட்ப யுகம். தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திப் பனையின் நற்பயன்களை அறுவடை செய்யவும், பொருளாதாரரீதியாக நாம் பலமடையவும் தேவையான வழிவகைகளைக் கண்டறிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.ரவீந்திரநாதன், மதுவரித்திணைக்கள உதவி ஆணையாளர் கிறிஸ்ரி ஜோசப், கட்டைக்காடு பங்குத்தந்தை டெஸ்மன் குலாஸ் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

building-mannar-nanattan-palmd-01

building-mannar-nanattan-palmd-02

building-mannar-nanattan-palmd-03

building-mannar-nanattan-palmd-04

building-mannar-nanattan-palmd-05

building-mannar-nanattan-palmd-06

building-mannar-nanattan-palmd-07

building-mannar-nanattan-palmd-08

building-mannar-nanattan-palmd-09

building-mannar-nanattan-palmd-10

building-mannar-nanattan-palmd-11

building-mannar-nanattan-palmd-12

building-mannar-nanattan-palmd-13

Related Posts