Ad Widget

பனை மரங்களின்அழிப்பை தடுக்க உடன் நடவடிக்கை தேவை – டக்ளஸ்

வடக்கு மாகாணத்தில் பனை மரங்கள் பாரியளவில் அழிக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. எனவே, இதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் பனங் கன்றுகளை அதிகளவில் நடுகை செய்வதற்கும் பனை அபிவிருத்தி சபை உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

கடந்த கால யுத்தம் காரணமாக எமது பகுதிகளில் பனை மரங்கள் மிக அதிகளவில் அழிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் வீடமைப்பு நடவடிக்கைகள் எனக் காரணங்காட்டி தொடர்ந்தும் பனை மரங்கள் அழிக்கப்பட்டன.

இந்த நிலையில் அப்போதைய எனது அமைச்சின் கீழிருந்த பனை அபிவிருத்தி சபையின் மூலம் பனை அழிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். இதனால் பனை அழிப்பு கூடுமானளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. அதேநேரம், பனை வளத்தைப் பேணும் நோக்கிலும் மேம்படுத்தும் நோக்கிலும் பனங் கன்றுகளை நடும் செயற்திட்டம் எம்மால் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

எனினும், தற்போது மீண்டும் வடக்கில் அதிகளவில் பனை அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

எனவே, இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு பனை அபிவிருத்தி சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரம், ஏற்கெனவே நாம் முன்னெடுத்து வந்த பனை நடுகைத் திட்டத்தையும் பரவலாக மேற்கொள்ள வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related Posts