Ad Widget

பனை உற்பத்தி விற்பனையை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள்

பனை உற்பத்தி பொருட்களின் விற்பனையை அதிகரித்து பனை உற்பத்தியில் தங்கியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தலைவர் கே.விஜிந்தன், திங்கட்கிழமை (02) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கடந்த காலத்தில் நிவர்த்தி செய்யப்படாமல் இருந்த வேலைத்திட்டங்களை குறுகிய நாட்களுக்குள் நிவர்த்தி செய்து, உற்பத்திகளை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

சர்வதேச ரீதியில் எமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கும் விமான நிலையத்திலும், சதோச, காகில்ஸ் போன்ற சிறப்பு கடைகளிலும் எமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

சுற்றுலா மையங்களை தெரிவு செய்து அங்கு எமது கற்பகம் விற்பனை நிலையத்தை அமைத்து நடமாடும் சேவைகளை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளோம்.

பனை அழிவை தடை செய்வதற்கு புதிய சட்ட ஏற்பாடு ஒன்று உருவாக்கி செயற்படுத்துவதற்கு எமது உறுப்பினர்களால் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் அதை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

கடந்த காலங்களில் கைப்பணி பயிற்சிகளை மேற்கொள்பவர்களின் இடைவிலகல் அதிகமாகி உள்ளது. அவ்வாறான இடைவிலகலை தடுப்பதற்கு பயிலுநர்களுக்கு உதவு தொகைகள் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

கீழ்மட்ட பணியாளர்களிடம் இருந்து கருத்துக்களை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். எந்தவகையில் உற்பத்திகளை அதிகரிக்க முடியுமோ, அந்த வகையில் உற்பத்திகளை அதிகரித்து வேலைவாய்ப்பு, முன்னேற்றங்களை மேற்கொள்ளவுள்ளோம்.

திக்கம் வடிசாலையிலுள்ள பிரச்சினைகளுக்கு முடிவு கண்டு அதனை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார்.

Related Posts