Ad Widget

பதவியுயர்வு இல்லையேல் போராட்டம்: ஜோசப் ஸ்டாலின்

Joshep-starlin2‘ஆசிரியர்களின் பதவியுயர்வு தொடர்பான உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் அல்லது கல்வி அமைச்சு மேற்கொள்ளாதுவிடின் பாரிய தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக’ இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

‘2014ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட அமுலாக்கத்திற்கு முன்னர் பதவியுயர்வு மேற்கொள்ளப்பட வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘இலங்கையில் 2 இலட்சத்து 17 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருவதுடன், இவர்களுக்கான பதவியுயர்வுகள் கடந்த 3 வருடங்களாக மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31இல் ஆசிரியர் பதவியுயர்வுக்கான 2011/30 என்ற சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டிருந்தும் ஆசிரியர்களுக்கான பதவியுயர்வு இன்னமும் வழங்கப்படவில்லை’ என்றார்.

‘ஆசிரியர்களுக்கான பதவியுயர்வினை வழங்கக்கோரி பல தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்த நிலையிலும் கல்வி அமைச்சும் அரசாங்கமும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

அத்துடன், சிரேஸ்ட அமைச்சர் மஹிந்த மகோ தலைமையில் ஆசிரியர் பதவியுயர்வுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தும் அந்த அமைப்பினால் இதுவரை காலமும் ஆசிரியர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘இவ்வாறு இருக்கும் பட்சத்தில், அரசாங்கத்தினால் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், வரவு செலவுத்திட்டத்தினை வெளியிடுவதற்கு முன்னர் ஆசிரியர்களுக்கான பதவியுயர்வினை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக உறுதியளிக்க வேண்டும்.

அவ்வாறு உறுதியளிக்கத் தவறும் பட்சத்தில், இலங்கையிலுள்ள தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பாரிய தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக’ இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Related Posts