Ad Widget

பதவிகளை பங்குபோடுவதிலேயே எமது காலத்தினை வீண் விரயம் செய்து கொண்டிருக்கிறோம்: தவராசா

மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டின் போது, வடக்கு மாகாண மக்களின் கோரிக்கையை அரசியல் ரீதியில் மத்திய அரசுக்கு எடுத்துரைத்தால் மாத்திரமே சாதகமான பலன்களை எட்ட முடியுமென வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

”வரவு செலவுத் திட்டத்தில் நாங்கள் கேட்கும் பணத்தில் மிகக் குறைவான ஒரு தொகையையே மத்திய அரசாங்கம் தருகின்றதென்று, ஒவ்வொரு ஆண்டும் மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அறிக்கையிடுகின்றோம்.

அரச வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்குவதற்கான எமது முன்மொழிவுகளை ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்தலுடன் மட்டும் நின்றுவிடாது எமது கோரிக்கையின் நியாயப்பாட்டினை அரசியல் ரீதியாக அரசிற்கு எடுத்துரைக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த ஆண்டிற்கான எமக்குரிய நிதியை அரசு நியாயமாக ஒதுக்க வாய்ப்புண்டு.

ஆனால், வரவு செலவுத்திட்டத்திற்கான முன்மொழிவு தொடர்பாக எமது உறுப்பினர்களுடன் முதலமைச்சர் இன்னும் கலந்துரையாடவில்லை. எமது கோரிக்கைகளின் நியாயப்பாட்டினை நிதி அமைச்சருக்கோ பிரதமருக்கோ எடுத்துரைக்கவில்லை. அதிகாரிகள் தயாரித்துக் கொடுப்பதை வைத்துக்கொண்டு எமது கோரிக்கைகளுக்கு அமைய அரசாங்கம் நிதி வழங்கவில்லையென குறிப்பிடுவது வினைத்திறனற்ற செயற்பாடாகும். இவ்வாறான முக்கிய செயற்பாடுகளை செய்வதற்கு பதிலாக, பதவிகளை பங்குபோடுவதிலேயே எமது காலத்தினை வீண் விரயம் செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

Related Posts