Ad Widget

பண்பாட்டுக்கு ஏற்ப பிள்ளைகளின் உடைக் கலாச்சாரத்திற்கு வழிகாட்ட வேண்டும்

news_2008_4_images_newsnewyear_lankaபெற்றோர்கள் எமது பண்பாட்டுக்கு ஏற்ப பிள்ளைகளின் உடைக் கலாச்சாரத்திற்கு வழிகாட்ட வேண்டும் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் தெரிவித்துள்ளார்.

உரும்பிராய், ஊரெழு கலாச்சார கலை விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

பண்பாடானது ஒழுக்கம், ஆண்மீகம், வாழ்க்கை முறைமையை இணைத்து கலை கலாச்சாரம் என்று தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றார்கள். யாழ்ப்பாண கலாச்சாரப் பண்புகள் வளர்வதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக்குறிப்பிட்ட யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் யாழ்ப்பாணக் கலாச்சாரம் அழிந்துவிட்டது என்று சொல்லிகொண்டுபோனால் அவை அழிந்துவிடும் எனத்தெரிவித்தார்.

எனவே நேரிய சிந்தனையுடன் கலாச்சாரத்தை வளர்க்கின்றோம், வளர்கின்றது, மேலும் வளர்வதற்கு வழி கோலும் என்று நேரடியான கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணக் கலாச்சாரம் வளர்வதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதற்கேற்ப வாழ்ந்துகாட்ட வேண்டும். கலாச்சாரத்திற்கு ஏற்ப பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உடைகளை வாங்கிக்கொடுக்க வேண்டும்,பிரதேச செயலகங்களில் நியமிக்கப்பட்டு கடமையாற்றுகின்ற கலைப் பட்டதாரிகள், உத்தியோகத்தர்கள், கலை ஆர்வலர்கள், கலாச்சாரப் பிரியர்கள், கலைஞர்கள், கலைகளை மேம்படுத்துவதற்கு துணைபுரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பிரதேச செயலங்களில் இணைக்கப்பட்ட கலைப் பட்டதாரிகள் கிராமத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் பிரதேச செயலகங்களின் கலைகளை வளர்ப்பதற்கு உதவ வேண்டும் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் மேலும் கேட்டுக்கொண்டார்.

Related Posts