Ad Widget

பண்ணை கடற்கரையில் 23 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி திட்டங்கள்

நகர அபிவிருத்தி அதிகார சபை வேலைத்திட்டத்தின் கீழ் பண்ணை கடற்கரையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் 23 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர்
வை.ஏ.ஜி.ஏ.குணதிலக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

‘பண்ணை கடற்கரை பகுதியில் தற்போது பூங்காவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவையொட்டியதாக இந்த வேலைத்திட்டங்கள் 2013 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேலைத்திட்டங்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பண்ணை வீதிக்கு கிழக்கு பக்கமாக ஒரு கிலோ மீற்றர் பகுதியில் ஒரு வேலைத்திட்டமும் பண்ணை வீதிக்கு மேற்கு பக்கமாக ஒரு கிலோ மீற்றர் நிலப்பரப்பில் மற்றய வேலைத்திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிழக்கு பக்கமான பகுதியில் நான்கு வாகன தரிப்பிடங்கள், சிறுவர்களுக்கான உபகரணங்களுடன் கூடிய விளையாட்டரங்கு, படகு சவாரி, உடற்பயிற்சி செய்வதற்குரிய வசதிகள், நடைபாதை செய்வதற்கான வசதிகள், கல் இருக்கைகள் போன்றன அமைக்கப்பட்டு வருகின்றன.

மேற்கு பக்கமான பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம், கடைத்தொகுதியுடன் கூடிய பார்வையாளர் தளமும் அமைக்கப்படவிருக்கின்றன.

கிழக்கு பக்க வேலைகள் இந்த வருடம் டிசெம்பர் மாதத்துக்குள்ளும் மேற்கு பக்க வேலைகள் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள்ளும் நிறைவடையும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts