Ad Widget

பட்டினிச்சாவுக் குற்றத்துக்கு ஆளாகாமல் இலங்கை அரசை இரணைமடுக்குளமே காப்பாற்றியது -அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

இலங்கை அரசு தமிழ் இனஅழிப்பை மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்திய குற்றச்சாட்டுக்கும் ஆளாகிச் சர்வதேசத்தின் முன்னால் இன்று தலைகுனிந்து நிற்கிறது. இக்குற்றச்சாட்டுகளோடு, இலங்கை அரசு தமிழ் மக்களைப் பட்டினியால் கொலை செய்த பட்டினிச்சாவுக் குற்றச்சாட்டுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருந்திருக்கும். அவ்வாறு ஆளாகாமல் இலங்கை அரசை இரணைமடுக்குளமே காப்பாற்றியது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

04

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து விவசாய உள்ளீடுகளை வழங்கும் நிகழ்ச்சி கிளிநொச்சி மாவட்டப் பிரதி விவசாயப் பணிமனையில் சனிக்கிழமை (10.10.2015) நடைபெற்றது. பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,

போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில், வன்னியில் 75,000 பேர் வரையிலேதான் உள்ளார்கள் என்று அறிவித்த இலங்கை அரசாங்கம், அவர்களுக்குத் தேவையான அளவு உணவுப் பொருட்களை மாத்திரமே வன்னிக்குள் எடுத்துச் செல்ல அனுமதித்தது. ஆனால், போர் முடிந்தபோது வன்னி முற்றுகைக்குள் இருந்து 3 இலட்சம் பேர் வரையில் வெளியேறினார்கள். அரசினால் அனுப்பி வைத்த உணவை மாத்திரமே நம்பியிருந்தால், இவர்கள் எல்லோரும் பட்டினிச்சாவால் இறந்திருப்பார்கள்.

போர்க் காலத்தில் கிளிநொச்சியில் இருந்து முல்லைதீவுக்கு மக்கள் இடம்பெயரும்போது தங்கள் உடமைகளை விட்டுச்சென்றார்கள். ஆனால், சேமித்து வைத்திருந்த நெல்லையும் அரிசியையும் எடுத்துச் சென்றார்கள். இந்த நெல்லும் அரிசியும்தான் பட்டினிச்சாவில் இருந்து தமிழ் மக்களைக்காப்பாற்றியது.

வடக்கின் நெற்களஞ்சியம் என்று கிளிநொச்சி மாவட்டத்தைக் குறிப்பிடலாம். வடக்கின் ஏனைய மாவட்டங்களைவிட கூடுதல் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் மாவட்டமாக கிளிநொச்சி உள்ளது. இங்கு 60,000 ஏக்கர் பரப்பளவில் நெற்செய்கையும் 15,000 ஏக்கரளவில் மேட்டுநிலப் பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்படுகிறது. இதில் இரணைமடுக்குளத்தின் பங்களிப்பு மிகப் பெரியது. அந்தவகையில், பட்டினிச்சாவுக் குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் இலங்கை அரசை இரணைமடுக்குளமே காப்பாற்றியுள்ளது.

அண்மையில், இரணைமடுக்குளத்துக்கு அருகாமையில் இலங்கை ஜனாதிபதி தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அப்போது, எமது விவசாயிகளைக் கௌரவிக்கும் முகமாகவே தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை கிளிநொச்சியில் ஆரம்பித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அதற்காக, அவருக்கு நாம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேவேளை, இலங்கை அரசாங்கமும் பட்டினிச்சாவுக் குற்றச்சாட்டு ஏற்படாமல் தன்னை காப்பாற்றியதற்காக இரணைமடுக்குளத்துக்கு நன்றி உடையதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படங்களுக்கு…

Related Posts