Ad Widget

பட்டதாரி பயிலுநர்கள் இன்று திங்கட்கிழமை அறிக்கையிடுவது அவசியமில்லை!!

பட்டதாரி பயிலுநர் நியமனம் பெற்றவர்கள் மார்ச் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது கடமை நிலையங்களில் அறிக்கையிடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்ட விதிகளின் அடிப்படையில் மறு அறிவித்தல்வரை பட்டதாரி பயிலுநர் அறிக்கையிடுவது அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பட்டதாரி பயிலுநர் நியமனம் வழங்கப்பட்ட 45 ஆயிரத்து 585 பேரையும் மார்ச் 30ஆம் திகதி இன்று திங்கட்கிழமை கடமை நிலையங்களில் அறிக்கையிடுமாறு பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்ட விதிகளில் ஒன்றான மாவட்டத்தைவிட்டு மற்றொரு மாவட்டத்துக்குச் செல்ல முடியாத நிலை பட்டதாரிகள் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்ற ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு நியமனம் கிடைத்த போதும் இங்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படாமல் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை கடமை நிலையத்துக்குச் சென்று அறிக்கையிட முடியாது என்று பாதிக்கப்பட்ட பலர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதனின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

நாடுமுழுவதும் 6 மாவட்டங்களில் இந்த பிரச்சினை உள்ள நிலையில் மறு அறிவித்தல்வரை பட்டதாரி பயிலுநர் அறிக்கையிடுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts