Ad Widget

பட்டதாரிப் பயிலுநர்களில் 75 வீதமானோர் பெண்கள்; யாழ்.அரச அதிபர்

Suntharam arumai_CIயாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் வழங்கப்பட்ட பட்டதாரிப் பயிலுநர்களுக்கான நியமனத்தில் 75 வீதமானவர்கள் பெண்களே. இவர்களைவிட அரச அலுவலகங்களில் அதிகம் பெண்களே கடமையில் உள்ளனர்.

அந்த வகையில் யாழ்.மாவட்டத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் பால் நிலை வன்முறைக்கு எதிரான செயற்குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு யாழ்.நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிலையத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் நினைவு கூரப்படுகிறது. இத்தகைய நிகழ்வுகளில் மகளிரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படுகிறது. அவர்கள் இதனைத் தவிர்ப்பதைப் பார்க்கும் போது மகளிருக்குப் பிரச்சினைகள் இல்லையா? அல்லது நிறைவேற்றப்பட்டு விட்டதா? என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால் மகளிரின் பங்களிப்பு மிக அவசியமாகவுள்ளது. மகளிர் தினம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே மகளிருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்.

பெண்கள் தமது அநீதிகளைத் தட்டிக்கேட்கும் நாளாக இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் உரிமைகளுக்கு தொடர்ந்தும் குரல் கொடுக்கும் நாளாகவே இது உள்ளது. ஆசியாவிலேயே பெண்களுக்கும் சம உரிமை முதன் முதலாக கிடைக்கப்பெற்ற நாடு இலங்கை ஆகும்.

1931 ஆம் ஆண்டு இந்த உரிமை கிடைக்கப்பெற்றது. மகளிருக்கு எமது நாட்டில் மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழில்வாய்ப்புக்கள், கல்வி, அரசியல் எனப் பெண்கள் அனைத்திலும் பங்களிப்புடையவர்களாக உள்ளனர்.

2005 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான ஒழுங்கு விதிச் சட்டம் கொண்டு வரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்காலத்தில் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வன்முறைச் சூழலுக்கு அகப்பட்டவர்களாக உள்ளனர். இதற்கான காரணத்தைக் கண்டறிந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பெண்கள் சம உரிமையுடன் வாழ்வதற்கு அடிப்படைக் காரணமாகப் பொருளாதாரம் உள்ளதால் அதற்காக இன்னொருவரிடம் தங்கி வாழ வேண்டிய நிலையில் உள்ளனர்.

இதற்கான செயற்றிட்டமாக யாழ்.மாவட்டத்தில் பெண்கள் வருமானத்தைப் பெறக் கூடியதாக ஊக்குவிப்புக் கடன் திட்டங்கள், தொழில் பயிற்சிகள், வாழ்வாதார கடன் உதவிகள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன. பெண்கள் தாமாகவே வருமானத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கமாகவுள்ளது.

ஆனால் தற்போது சமூகத்தில் மரபு ரீதியான நடவடிக்கைகள் பேணப்பட்டு வருகின்றமையால் பெண்கள் உரிமை இழந்தவர்களாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பெண்கள் ஒன்றாகக் கூட்டிணைந்து தமது உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் சகல உரிமைகளுடனும் வாழ முடியும் என்றார்.

யாழ்.மாவட்ட செயலக பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் உதயணி நவரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் யாழ்ப்பாண உத்தியோகத்தர் காயத்திரி, புங்குடுதீவு வட இலங்கை சர்வோதய அறங்காவலர் பொன்னம்பலம் ஜமுனாதேவி, மருதங்கேணி பிரதேச செயலர் எஸ். திருலிங்கநாதன், பருத்தித்துறை பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இதில் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Related Posts