அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப்புகை பிரயோகித்திற்கு எதிராக யாழ்ப்பாணத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட பட்டதாரிகள் நேற்றய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது அவர்கள், எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், நல்லாட்சி அரசாங்கம் தீர்வு திட்டத்தினை வழங்க வேண்டுமே தவிர, ஜனநாயகம் என்ற பேரில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும், பட்டதாரிகளாகிய நாம் அரசியல்வாதிகளுக்கோ அதிகாரிகளுக்கோ எதிரானவர்கள் அல்ல, மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்கள் இணைந்து எமக்கு வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பில் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்தும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கக் கோரியும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினாலும் நேற்று ஆர்ப்பாட்ட பேரணியும் கவனஈர்ப்பு போராட்டமும் நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
