Ad Widget

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு பிரேரணை நிறைவேற்றம்

வடமாகாணத்தில் 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையில் பட்டம் பெற்று வெளியேறிய வேலையற்ற பட்டதாரிகளுக்கு பொருத்தமான வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கவேண்டும் என உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனால் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏகமனதாக வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (24) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோது, சுகிர்தன் இந்த பிரேரணையை முன்வைத்தார்.

பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில், பட்டதாரிகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். முன்னைய அரசியல் கலாசாரம் தொடருமேயானால் படிப்பை விட்டுவிட்டு அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்லவேண்டிய நிலை உருவாகும்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள பட்டதாரி மாணவர்களுக்கு அவர்களின் பிரதேசங்களிலேயே ஆசிரிய நியமனம் வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கடந்த காலத்தில் பட்டதாரிகள் மாணவர்கள் நீலப்படையணி என்ற போர்வையில் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டார்கள். நியமனம் என்று வரும்போது, தகுதிகளுக்கு அப்பால் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2024 பட்டதாரி மாணவர்களின் விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஊடகத்துறையை கல்விகற்ற 94 மாணவர்கள் வேலையற்று உள்ளார்கள். இவர்கள் உரிய முறையில் வேலைகளுக்கு உள்வாங்கப்படவேண்டும் என்றார்.

முகாமைத்துவ உதவியாளர்களாக கீழ் உழைப்பில் பணியாற்றும் பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக உள்வாங்கப்படவேண்டும் என்ற சுகிர்தனுடைய மற்றொரு பிரேரணையும் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதேவேளை, உயர் தேசிய முகாமைத்துவ டிப்ளோமா பட்டதாரிகளில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களும் இணைத்துக் கொள்வதற்கு தற்போதய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோரும் பிரேரணை வடமாகாண அவைத்தலைவரால் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related Posts