Ad Widget

பட்டதாரிகளுக்கு போட்டிப்பரீட்சையின் மூலமே வேலை! அமைச்சரவை முடிவு!

இனி பட்டதாரிகளுக்கு போட்டிப்பரீட்சையின் மூலமே வேலை என இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளது  .
இலங்கையில் அரசாங்க சேவைக்கு ஆரம்ப காலத்தில் பட்டதாரிகள் நேரடியாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள அதேவேளையில், அதன் பிரகாரம், 1964 ஆம் ஆண்டு வரை பட்டதாரிகள் சகலருக்கும் அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்காக பட்டதாரிப் பயிலுநர் முன்மொழிவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளையில், பின்னர் காலத்திற்குக் காலம் வந்த அரசாங்கங்களினால் பல்வேறு பட்டதாரிப் பயிலுநர் முன்மொழிவுத் திட்டத்தின் கீழ் பட்டதாரிகள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் 2005 ஆம் ஆண்டில் சுமார் 46,198 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் 2011/2012 ஆம் ஆண்டுகளில் 41,871 பட்டதாரிகள் பயிலுநர்களாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பயிலுநர்கள் ஒரு வருட கால பயிற்சியின் பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.

2005 ஆம் ஆண்டில் அரசாங்க கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்டமுறைச் சபைகள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பனிகள் உட்பட மொத்த அரசாங்கத் துறையினுள் உண்மையான பதவியணி 900,642 ஆகக் காணப்பட்டது. வருடாந்தம் அரசாங்க கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்டமுறைச் சபைகள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பனிகள் ஆகியவற்றிலுள்ள ஊழியர்களைத் தவிர சுமார் 22,000 அரசாங்க ஊழியர்கள் ஓய்வுபெறுகின்ற போதிலும், மொத்தமாக அரசாங்கத் துறையிலுள்ள உண்மையான பதவியணி 2014 ஆம் ஆண்டளவில் 1,302,258 வரை துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது.

மேற்குறிப்பிட்ட விதமாக அரசாங்க சேவைக்கு 88,069 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள போதிலும், அமைச்சுக்கள், திணைக்களங்கள், மற்றும் பிரதேச செயலகங்களில் காணப்படுகின்ற கடமைகள் மற்றும் பொருத்தமான விடய அறிவு மற்றும் தேர்ச்சி என்பன இந்த உத்தியோகத்தர்களிடத்தில் இல்லாதபடியினால் எதிர்பார்க்கப்படுகின்ற பெறுபேறுகளை அடைந்து கொள்வதில் பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

எனவே நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களின் யோசனைக்கு இணங்க அரசாங்க துறையின் பதவியணியை 5 வருடங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்ய வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்தப் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள படியினால், அந்த மீளாய்வின் பின்னர், சேவையின் தேவைப்பாட்டுக்கு அமைவாக அடையாளங் காணப்படுகின்ற பதவி வெற்றிடங்களுக்கு மாத்திரம் நவீன சவால்களுக்கு பொருந்தக் கூடிய விதத்தில் அரசாங்க சேவையை பேணுவதற்குத் தேவையான விடய அறிவு மற்றும் தேர்ச்சி என்பவற்றைக் கொண்ட பட்டதாரிகளை போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரம் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related Posts