Ad Widget

“பட்டதாரிகளது சம்பளத்தில் வடக்கில் தேர்தல் பரப்புரை, பாதிக்கப்பட்டவர்கள் தட்டிக்கேட்க வேண்டும்” – சரவணபவன்

saravanabavanபயிலுநர்களாக உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசதரப்பினர் அந்தப் பணத்தை தேர்தல் பரப்புரைகளுக்கும், பதாதைகளுக்கும், போஸ்டர்களுக்கும் தேர்தல் காலத்தில் லஞ்சம் கொடுக்கவும் செலவிடுகின்றனர்.

பட்டதாரி பயிலுநர்கள் எல்லோரும் இணைந்து டக்ளஸ் தேவானந்தாவிடம் இதனைத் தட்டிக் கேட்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

கொக்குவில் பாரதி சனசமூகநிலைய திடலில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

மாகாணசபைகள் சர்வரோக நிவாரணி எனக் கூறும் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் பொலிஸ் நியமனங்களைப் பெற்றுத் தரும்படி மத்திய அரசிடம் மண்டியிடுவது ஏன்? அப்படியானால் மாகாண சபைகளுக்கு உரித்தான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்பதை இவர் எதிர்க்கிறார் என்றே கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணம் வந்துள்ள அமைச்சர் பஸில் ராஜபக்­ கூறுகின்றார், டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளின் பேரில் ஐயாயிரம் இளைஞர்களுக்கு பொலிஸ் நியமனம் பெற்றுக் கொடுக்கப் போவதாகக் பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கப் போகிறோம் என்று கூறுகின்றார்.

பதின்மூன்றாவது திருத்தத்தின்படி பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாண சபைக்கு உரித்தானவை. இதன்படி பொலிஸ் நியமனங்களை வழங்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கே உரித்தானது. இதை இவர்கள் அறியாமல் பிதற்றுகின்றனர்.

இதேவேளை பஸில் ராஜபக்­ முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் யாழ். மக்களின் காணிகளை அரசு அபகரிக்கவில்லை என்றும், இந்திய அமைதிப் படையினரே தமிழர்களின் காணிகளை ஆக்கிரமித்து வைத்திருந்தனர் என்றும் அதைத்தான் தாம் இப்பொழுது விடுவித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறுகிறார்.

இந்திய அமைதிப் படை இங்கு இருந்த போது பஸில் எங்கே இருந்தார்? அவருக்கு உண்மை தெரியுமா? இந்திய அமைதிப் படையினர் வெளியேற்றப்பட்டபின் எமது மக்கள் மீண்டும் தத்த மது சொந்த இடங்களில் குடியேறினர். ஆனால் இப்பொழுது எமது காணிகளை ஆக்கிரமித்து ஆடம்பர மாளிகையும், ஜனாதிபதிக்கு உல்லாச ஓய்விடமும், படையினருக்கு நிரந்தர வீடுகளையும், சிங்களக் குடியேற்றங்களையும் ஏற்படுத்திக்கொண்டு கதை விடுகிறார் பஸில்.

வடக்கில் தனித் தமிழ் அரசு அமைந்து விடும் என மஹிந்த அரசு அஞ்சுகின்றது.

வடமாகாணசபையின் தேர்தல் முடிவுகளையும் நமது தமிழ் தேசிய உணர்வையும் சர்வதேசம் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. இந்தத் தேர்தல் ஒரு கருத்துக் கணிப்பாகவும் அமைந்துள்ளது.

இதனை மனதில் கொண்டு மக்கள் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். நமது விடிவுக்காக, நமது உறவுகள் செய்த தியாகத்திற்காக நாம் அர்ப்பணிப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்.என்றார்.

Related Posts