Ad Widget

படையினர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு சட்ட விலக்களிப்பு நீடிக்கிறது – ஐ.நா. செயலாளர்

இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னர் தமிழ்ப் பெண்கள் மற்றும் மகளிர் மீது அவர்களின் பிரதேசங்களை இராணுவ மயப்படுத்தும் சாக்கில் பாலியல் துன்புறுத்தல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை குறித்து அறிக்கையிடப்பட்டு வருகின்றது. – இவ்வாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு தாம் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்திருக்கிறார்.

ban-keen-moon

முரண்பாடுகள் தொடர்பான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரணை நடத்துமாறு அவ்வறிக்கையில் இலங்கை அரசைக் கோரியுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம், யுத்தத்தின் முடிவின் பின்னான காலத்தில் இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் அத்தயை சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

முரண்பாடுகளை ஒட்டிய பாலியல் வன்முறைகள் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு அறிக்கையிட்டுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம், இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கழிந்துள்ள நிலையில் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் இணைவு, மீள் குடியேற்றம் ஆகியவற்றுக்கு உதவுவதில் பற்றுறுதி கொண்டுள்ள இலங்கை அரசு அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

என்றாலும், முரண்பாடுகள் தொடர்பான வன்முறை விடயங்களில் குற்றவிலக்களிப்பு முறைமை நீடிக்கின்றமை தொடர்ந்து கவனிக்கப்படாத முக்கிய விவகாரம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு இடமளிப்பதேயில்லை என்றும், அத்தகைய குற்றங்கள் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் மீதும் நடவடிக்கை எடுத்து, அவர்களை படைகளில் இருந்து நீக்குவது உட்பட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அரசு உறுதி கொண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டிய ஐ.நா. பொதுச் செயலாளர் என்றாலும், யுத்தம் முடிவுற்ற காலத்தின் பின்னரும் கடத்தல், ஒரு தலைப்பட்சமான தடுத்து வைத்தல், சித்திரவதை, பாலியல் வல்லுறவு மற்றும் ஏனைய வடிவங்களிலான பாலியல் வன்முறைகள் அதிகரித்தமை தொடர்பில் சமிக்ஞைகள் காணப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக தமிழ்ப் பெண்களும், மகளிரும் அவர்களின் பிரதேசங்கள் இராணுவ மயப்படுத்தப்படும் சாக்கில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது. “யுத்தத்தின் இறுதி மாதங்களிலும் முரண்பாடு முடிந்த காலத்தின் பின்னரும் தமிழினத்தின் மீது இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இழைத்தவை எனக் கூறப்படும் பாலியல் வன்முறைகள் குறித்து விரிவாக ஆதாரப்படுத்தப்பட்டுள்ளபோதும் அவை குறித்து கவனிக்கப்படவேயில்லை.

“2014 இல் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்களின் சாட்சியங்கள், தனியாட்களுக்கு எதிராக – குறிப்பாக விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் மீது – பாலியல் சித்திரவதையும் இன ரீதியான அவமானப்படுத்தலும் இழைக்கப்பட்டன என்பதைக் காட்டுகின்றன.” என்று ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவிக்கின்றார்.

தேசிய ஆயுதப் படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எதிரானவை உட்பட பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கையில் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய அரசைக் கோரியுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம், யுத்தத்தினால் விதவைகளானோர் மற்றும் குடும்பத் தலைவர்களாக உள்ள பெண்கள் உட்பட பாதிக்கப்படும் அபாயத்தில் சிக்குண்டுள்ள அனைத்து மகளிரதும் வாழ்வியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தி, திருத்தியமைத்தல் அடங்கலாக, இந்தக் குற்றங்களில் பாதிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்தோருக்கு பல அடுக்கு சேவைகளை வழங்க முன்வருமாறும் அந்த அறிக்கையில் வேண்டியுள்ளார்.

Related Posts