Ad Widget

படையினரும் பொலிஸாரும் நடத்திய தாக்குதல் மிகப் பெரிய அநாகரிகச் செயல்! -வலம்புரி ஆசிரியர் தலையங்கம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீது படையினரும் பொலிஸாரும் நடத்திய தாக்குதல் மிகப் பெரிய அநாகரிகச் செயல்.இத்தகைய செயல்களில் படைத்தரப்பினர் ஈடுபடுவதை அவர்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் அனுமதிக்கலாகாது.ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற, அதனைத் தடை செய்கின்ற அதிகாரம் பொலிஸாருக்கு உண்டென்பதை மறுப்பது எமது நோக்கமல்ல.

அதேநேரம், பல்கலைக்கழக மாணவர்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கும் அது தொடர்பில் தமது எதிர்ப்பை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்துவதற்கும் உரித்துடையவர்கள்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் விரும்பவில்லையாயின், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான அணுகுமுறைகள் பல உள்ளன.

அதனை விடுத்து பல்கலைக்கழக மாணவர்களைத் துரத்தித் துரத்தித் தாக்குவது, கீழே தடக்கி விழுந்த மாணவர்களை பொலிஸார் கூடி நின்று மிதிப்பது போன்ற செயல்கள் அநாகரிகமானவை.

இது குறித்து பொலிஸ் பொறுப்பதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்.

இவ்வாறு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சாடியுள்ளது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

காக்கிச்சட்டை அணிந்துவிட்டால் மற்றவர்களை அடிப்பதுதான் தொழில் என்று நினைத்து விடக்கூடாது. காக்கிச் சட்டை அணிந்த பணியில் எத்தனையோ சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்திவிட முடியும்.

இதைவிடுத்து இவர்கள் தமிழ் மாணவர்கள் இவர்களைத் துரத்தித் துரத்தி அடிப்பதுதான் எங்கள் இனவாதப் பேய்க்கு ருசி என்று நினைத்து சின்னத்தனமாக நடந்துகொள்வது இலங்கை மண்ணில் அமைதி நிலவுவதை, ஒற்றுமை ஏற்படுவதை விரும்பாதவர்களின் செயலாகும்.

ஒரே நாடு, ஒரே தேசம் என்பதை ஆலடிச் சந்தியில் எழுதிவிட்டால் மட்டும் போதாது.

அதற்கேற்றவாறு எல்லா இன மக்களையும் சம உரிமையோடு நோக்க வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைத் துரத்தித் துரத்தி அடித்த பொலிஸார் தென்பகுதியில் இவ்விதம் செய்ய முடியுமா?

அவ்வாறு செய்தால் சிங்கள மாணவர்கள் திரும்பி ஓடமாட்டார்கள். மாறாக பொலிஸாரின் மண்டையில் இரத்தம் ஓட வைத்திருப்பார்கள்.

சிலவேளை அரசியல் நலன் கருதி சில பொலிஸாரின் பதவியும் பறிக்கப்படலாம்.

ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொலிஸார் இனவாதத்துடன் நடந்து கொண்டனர். இது மிகப் பெரிய கண்டனத்துக்குரியது.இத்தகைய செயல்களில் பொலிஸார் ஈடுபடுவதை இனிமேலாவது தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இன ஒற்றுமை ஏற்படுவதை விரும்பினால், பல்கலைக்கழக மாணவர்களுடன் பேசுங்கள். அதன் மூலம் ஒரு சுமுகநிலையை ஏற்படுத்துங்கள்.

இதைவிடுத்து கல்விக்கும் மாணவர்களுக்கும் களங்கம் செய்யும் வகையில் மாணவர்களைத் தாக்காதீர்கள். அநாகரிகமாக நடந்து கொள்ளாதீர்கள்.

Related Posts