Ad Widget

படையினரின் அச்சுறுத்தலால் கிளிநொச்சியில் ஒரு குடும்பம் பீதியில்!

கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் மீதும் சிறுவர்களின் மாமன் மீதும் படைச்சிப்பாய் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் குறித்த இரு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த சிறுவர்களின் தயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நேற்றைய தினம் மாலை 3.30 மணியளவில் எனது பிள்ளைகளான பி.பிருந்தா (6வயது) பி.கிருஷாந்த் (வயது2) இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வீதியினால் வந்த படைச்சிப்பாய் ஒருவர் என் மகளுக்கு அடித்தார். பின்னர் மகனுக்கும் அடித்து கீழே தள்ளியதுடன் காலால் மிதித்துக் கொண்டு நின்றுள்ளார். இதனை வீட்டுக்கு முன்னால் நின்றிருந்த பிள்ளைகளின் மாமனார் பார்த்துவிட்டு எதற்காக பிள்ளைகளை அடிக்கிறீர்கள்? என கேட்டதற்கு அவர் மீது தகர வாளியினால் அடித்துள்ளார்.

இதனால் அவர் தலையில் படுகாயமடைந்தார். பின்னர் எங்கள் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் ஊடாக உடனடியாக படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்கள் வந்து குறித்த சிப்பாயை பிடித்து இழுத்துச் சென்றனர். பின்னர் சிறுவர்களையும், தம்பியையும் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றோம்.

மேலும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கும் சென்று முறைப்பாடு கொடுத்திருந்தோம். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு எங்கள் வீட்டிற்கு வந்த படையினர் நாங்கள் கொடுத்த முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தினர். அதேபோன்று என் தம்பியையும் அவர்கள் அச்சுறுத்தினர். இதனால் இன்று நாங்கள் முறைப்பாட்டை வாபஸ் பெற்றோம்.

ஆனால் அடித்த படைச்சிப்பாய்க்கு மனநோய் எனக் கூறி தாங்கள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பியிருப்பதாக கூறியிருக்கின்றார்கள். எனக்கு கணவர் இல்லை. தனியாக வாழ்கிறேன். மேலும் இந்த விடயம் குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கும் தெரியப்படுத்தினேன். ஆனால் அவர்கள் எமக்கு ஒத்துழைக்கவில்லை.

எமக்கு வாழ்வதற்கே பயமாக இருக்கின்றது. என் 2 வயது மகன் மூச்சு விட முடியாத நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.

Related Posts