Ad Widget

படையினரிடம் வாக்காளர் இடாப்பு; கண்காணிப்பு நிலையம் குற்றச்சாட்டு

election-metingவட மாகாணத்தை பொறுத்தவரையில் படைத்தரப்பினர் வாக்காளர் இடாப்புகளை வைத்திருப்பது மற்றும் வீடுவீடாகச்செல்வது மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்று தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதனை தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் அழைப்பாளர்களான பாக்கியசோதி சரவணமுத்து, உதயகளுபத்திரன, சுனில்ஜெயசேகரா மற்றும் வடமாகாண இணைப்பாளர் சி.மணிமாறன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

அவர்கள் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண சபைக்கான தேர்தல் உண்மையாகவும் நேர்மையாகவும் நடைபெறுமா என்பது தொடர்பில் பொது மக்கள் மத்தியில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் தொடர்பில் பொலிசார், வடமாகாண பிரதித் தேர்தல் ஆணையாளர், பொலிஸ் உயர் அதிகாரிகள், கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியுள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மாகாண சபைத்தேர்தல் நடைபெறவுள்ள மூன்ற மாகாணங்களின் பிரதி தேர்தல்கள் ஆணையாளர்கள் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகளை நாம் சந்தித்துள்ளோம்.

வடமாகாண தேர்தல் மற்றும் தேர்தலுடன் தொடர்பு பட்டதாக இங்கு இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்து மக்களினது எண்ணங்கள், அச்சம் மற்றும் பயம் பற்றி பொலிசாருக்கும் தொவித்துள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் இடம் பெறும் தேர்தல் வன்முறைகள் சம்பந்தமாக பொலிசார் நடவடிக்கைளை எடுக்காது இருப்பது பொது மக்களிடையே பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்று படைத்தரப்பினர் வாக்காளர் அட்டைகளை பெறுவதும், வீடுவீடாகச்செல்வதும் கூட பொது மக்களை அச்சத்தை தோற்றுவிக்கும். வாக்களிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தும் என்றும் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.

தேர்தல் நடைபெறும் அனைத்து மாகாணங்களிலுள்ள தேர்தல் தொகுதிகளுக்கும் கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளோம்.இதேபோன்ற தேர்தல் நடைபெறும் நாளில் வாக்களிப்பு நிலையங்களையும் கண்காணிப்பதற்கான அலுவலர்களை நியமிக்கவுள்ளோம்.

வாக்குகள் எண்ணப்படும் இடத்திக்கு நாம் செல்ல முடியாது அந்த வகையில் வாக்கு எண்ணப்படும் இடங்களில் எமது கண்காணிப்பாளர்கள் இருக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Posts