Ad Widget

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ‘தராக்கி’ சிவராமின் 11ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ். முற்றவெளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபியின் முன்னால் இம்முறை தராக்கியின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதியுடன் ஊடகவியலாளர் ‘தராக்கி’ சிவராம் கொல்லப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. தாராக்கியின் 10ஆவது நினைவு தினத்தை சுதந்திர ஊடக அமைப்புக்கள், யாழ் ஊடக அமையம் மற்றும் கிழக்கு ஊடக அமைப்புக்கள் இணைந்து மட்டக்களப்பில் அனுஷ்டித்திருந்தன. இவ்வாறான நிலையில் வடக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக யாழ்ப்பாணம் முற்றவெளிப் பகுதியில் நினைவுத் தூபியொன்று அமைக்கப்பட்டுள்ளது. எனவே இம்முறை தராக்கியின் நினைவுதினத்தை தூபிக்கு முன்னால் அனுஷ்டிக்கத் தீர்மானித்துள்ளனர். யாழ் ஊடக அமையம் உள்ளிட்ட பல்வேறு ஊடக அமைப்புக்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி இரவு கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வெள்ளை வானொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் ‘தராக்கி’ சிவராமைக் கடத்திச் சென்றிருந்தனர். மறுநாள் 29ஆம் திகதி பாராளுமன்றத்தை அண்மித்த சிறிஜயவர்த்தனபுர கோட்டைப் பகுதியில் சிவராம் சடலமாக மீட்கப்பட்டார்.

Related Posts