Ad Widget

படகுகளை நகர்த்துவதில் பெரும்பாடு வடமராட்சி மீனவர்கள் கடும் விசனம்

வடமராட்சி கடற்பிரதேசத்தில் தொண்டமானாறு தொடக்கம் முனை வரையும் உள்ள 33 வான்களும் மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடற்றொழிலுக்கு வள்ளங்கள், கட்டுமரங்களை கடலுக்குள் கொண்டு செல்லவும், மீளக் கொண்டுவரவும் முடியாது பெரிதும் சிரமப்படுகின்றனர்.

அண்மையில் பெய்த மழை, கடுமையான கடற்கொந்தளிப்புக் காரணமாக வான்பாதையில் மணலும், முருகைக்கற்களும் வந்தடைந்துள்ளன. இவை வான்பாதைகளை மூடியும் அரைகுறையாக மூடாத நிலையிலும் உள்ளன. குறிப்பாக இன்பருட்டி மேற்கு, சுப்பர்மடம் ஆகிய இடங்களில் உள்ள வான்கள் மணல், முருகைக் கற்களால் முற்றாக மூடப்பட்டுள்ளன.

வான் பாதைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைகளால் மீனவர்கள் தொழிலுக்காக வள்ளம், கட்டுமரங்களை கடலுக்குள் கொண்டுசெல்ல முடியாதும், கொண்டு சென்ற படகுகளை மீண்டும் கரைக்கு கொண்டு வர முடியாமலும் திண்டாடி வருகின்றனர்.

காலத்துக்கு காலம் மீன்பிடி நீரியல் திணைக்களத்தினால் வான்பாதைகள் தோண்டப்படுவது வழக்கம். இந்த முறை இவை தோண்டப்படாமையினால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மீனவர்கள் தமது வள்ளம், கட்டுமரங்களை தொழிலுக்கு எடுத்துச் சென்று வருவதற்காக மிக விரைவாக இந்த வான்பாதைகளை அவசரமாகத் தோண்டித் தருமாறு பிரதேச மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts