Ad Widget

பசிலுக்கு இன்று பிறந்தநாள்: அவைக்கும் வருகிறார்

தனது பிறந்த நாளை இன்று திங்கட்கிழமை (27), கொண்டாடும் பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மெர்ஷன்ட் பிரிவிலிருந்து (கட்டணம் செலுத்தும் பிரிவு) சிறைச்சாலை வாகனம் மூலம் நாடாளுமன்றத்துக்குச் சென்று அங்கு இடம்பெறவுள்ள அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்கவுள்ளார்.

திவிநெகும நிதி மோசடி விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, கடந்த (22)ஆம் திகதி, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு விசாரணைக்காக சமுகமளித்திருந்த போது 10 மணித்தியால விசாரணையின் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவருடன் சேர்த்து, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ரக் ரணவக்க ஆகியோரும் கைதாகினர். இந்நிலையில் இவர்கள், கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி வரை அவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து அவர்கள் மூவரும், கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, தன்னை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் விடுதிக்கு மாற்றுமாறு பசில் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அவர் அப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதில், பசில் ராஜபக்ஷவும் பங்கேற்கவிருக்கின்றார்.

Related Posts