Ad Widget

பங்கேற்பு ரீதியான அபிவிருத்தி எதிர்காலத்தில் வெற்றியளிக்கும்; யாழ்.மாநகர சபை ஆணையாளர் தெரிவிப்பு

வடக்கு மாகாணம் 34 உள்ளூராட்சி சபைகளைக் கொண்ட பெரிய பிரதேசம். இந்த நிலையில் யாழ்.மாநகர சபை ஆசிய மன்றத்தின் அனுசரணை, ஆலோசனையுடன் முதன்முதலாக பங்கேற்பு ரீதியான அபிவிருத்தித் திட்டத்தை 47 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டம் முழுமை பெற்றுள்ளது. இதனூடாக எதிர்கால அபிவிருத்தி நிச்சயம் வெற்றியளிக்கும். யாழ்.மாநகர சபை ஆணையாளர் செ.பிரணவநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையின் பங்கேற்பு ரீதியான அபிவிருத்தித் திட்ட நூல் வெளியீட்டு விழா யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இடம்பெற்றது.

இன்று வடக்கு மாகாணம் பல துறைகளில் அபிவிருத்தியை நோக்கி முன்னேறுகின்றது இன்று மாநகர சபையால் வெளியிடப்பட்ட நூல் சாதாரண ஒரு திட்டமல்ல.

இதன் ஊடாக 47 கிராம மட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் தேவைகளை இனம் கண்டுள்ள அபிவிருத்தி திட்டமாகும். விரைவில் வடக்கில் உள்ள ஏனைய சபைகளும் தயாரிக்கவுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பங்கேற்பு அபிவிருத்தி திட்டம் தொடர்பான நூலின் சிறப்பு பிரதியை மாநகர மேயரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினர் உரையாற்றியதுடன் பங்கேற்பு அபிவிருத்தித் திட்ட நூலின் சிறப்பையும் அதனூடாக அடையப்பட வேண்டிய அபிவிருத்திகள் பற்றியும் கூறினார்.

ஏனைய 33 சபைகளும் இவ்வாறான சிறந்த செயற்றிட்டத்தை முன்னகர்த்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஆசிய மன்றத்தின் சிறப்பு தொழில்நுட்ப ஆலோசகர் எஸ்.சுபாகரன் சிறப்புரையாற்றினார்.

இதேவேளை கிழக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் வே.பொ.பாலசிங்கம் மற்றும் 47 கிராம அதிகாரிகள், மாநகர சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன.

பங்கேற்பு ரீதியான அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பதற்கு ஒத்துழைத்த 16 பேருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

Related Posts