Ad Widget

நோதேர்ன் பவர் பிளாண்ட் நிறுவனம் மீதான தடையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரிப்பு

சுன்னாகத்தில் உள்ள நோதேர்ன் பவர் பிளாண்ட் நிறுவனத்தை காலவரையறையின்றி மூடவூம், அதன் ஊழியர்களை வெளியேற்றவும் மல்லாகம் நீதவான் நீதிமன்று கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதியன்று பிறப்பித்திருந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது.

jaffna_power_plant_chunnnakam

அதன் பிரகாரம் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக தமது நிறுவனம் திறக்கப்பட்டுள்ளதாகவும் தனது ஊழியர்கள் திங்கட்கிழமை முதல் வேலைக்குத் திரும்பலாம் என்றும் நோதேர்ன் பவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

“ஜனவரி 27 ஆம் திகதியன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட வெளியேற்ற உத்தரவு சட்டத்துக்கு முரணானது என்பதனை நாங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம். எங்களது மனுவைத் தொடர்ந்து, முற்றுமுழுதான நுழைவுரிமை வழங்கப்பட்டு, இடையறா உடைமையுரிமை, தேவைப்படும் சோதனைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கல் என்பனவற்றுக்கான அனுமதியயை மீள வழங்கி, இந்நிறுவனம் மூடப்பட்டதைத் தொடர்ந்து முடக்கப்பட்ட இச்செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கியது மேன்முறையீட்டு நீதிமன்றம்.

இவ்வுத்தரவு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் மற்றும் யாழ் மேல் நீதிமன்றம் என்பனவற்றுக்கு முறையே அறிவிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது. அத்துடன் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதியன்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது நீதிமன்றுக்கு சமூகமளிக்குமாறு பிரதிவாதிகள் 11 பேருக்கும் மேன் முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது” என நோதேர்ன் பவர் (பிறைவேட்) லிமிடெட்டின் தாய் நிறுவனமான எம்ரிடி வோகர்ஸ் பீஎல்ஸீயின் பணிப்பாளர் /பிரதம நிறைவேற்றதிகாரி லால் பெரேரா தெரிவித்தார்.

யாழ்ப்பாண மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தும் வருந்தத்தக்க நீர்மாசடைதல் செயற்பாடுகளில் அதன் ஆரம்பம் முதற்கொண்டே நோதேர்ன்பவர் நிறுவனம் எந்த விதத்திலும் தொடர்பினைக் கொண்டிருக்க வில்லையாதலால், தனது மின் உற்பத்திச் செயற்பாடுகளுக்கும் விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று இந்நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts