Ad Widget

நைஜீரியாவில் பள்ளிவாசல் மீது தாக்குதல், 200 பேர் பலி

நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரான கானோவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் இடம்பெற்ற கானோ பள்ளிவாசல்
தாக்குதல் இடம்பெற்ற கானோ பள்ளிவாசல்

அங்குள்ள மத்தியப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்னர் மூன்று குண்டு வெடிப்புகளும் இடம்பெற்றன என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

இத்தாக்குதல்களை அடுத்து மக்கள் அங்கிருந்து பீதியில் வெளியேறினர் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நகரிலுள்ள முக்கிய சவக்கிடங்குக்கு இதுவரை 200 சடலங்கள் வந்துள்ளதை தான் எண்ணியுள்ளதாக உள்ளூர் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளதால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ளூர் மருத்துவமனைகளால் ஈடுகொடுக்க முடியவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

இதையடுத்து கோபாவேசமடைந்துள்ள நகரவாசிகள் தமக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறி வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசல், கானோ நகரின் எமீரான இரண்டாம் முகமது சனூசியின் மாளிகைக்கு அருகில் உள்ளது.

அவர் தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராமை கடுமையாக எதிர்த்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராக தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என்று கடந்த வாரம்தான் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Related Posts