யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தின் காப்பகங்களாக முக்கிய மையங்களாக விளங்கும் காக்கைத் தீவு மற்றும் கல்லூண்டாய் கழிவு சேகரிப்பு நிலையங்கள் தொடர்பில் மாநகர சபை தொடர்ச்சியாக தன்னுடைய பொறுப்பற்றதன்மையினையும் அணுகுமுறையினையும் வெளிப்படுத்திவருவது என்பது மறுக்க முடியாத உண்மையுமாகும். இது மிகுந்த கவலையளிக்கும் விடயம்.

கடந்த 23ஆம் திகதி காக்கைத் தீவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் எழுந்த அடர்ந்த புகை கொக்குவில் ஆனைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களை கடுமையாகப் பாதித்தது. அதனைத் தொடர்ந்து நேற்று (24ஆம் திகதி) கல்லூண்டாய் கழிவு சேகரிப்பு மையத்தில் ஏற்பட்ட மற்றொரு தீ விபத்தினால் கல்லூண்டாய் அராலி மானிப்பாய் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
கழிவு சேகரிப்பு மையங்களில் தீ விபத்துகள் ஏற்படுவது முற்றிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஒரே இடங்களில் மீண்டும் மீண்டும் தீ விபத்துகள் ஏற்படுவதும் தற்போது அது ஒவ்வொரு நாளும் காக்கைதீவு, கல்லுண்டாய் என மாறிமாறி தீ பரவல்கள் நிகழ்வதும் இது சாதாரண தீ விபத்தா அல்லது தீயவர்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தீவிபத்தா என்ற கேள்வியை எழுப்புகின்றது. இதனை முழுமையாக விசாரித்து உண்மையை வெளிக்கொணர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பது யாழ்ப்பாணம் மாநகர சபைகே மட்டும் உரித்தான பொறுப்பாகும்.
தீ விபத்து ஏற்பட்டதும் தீயணைப்பு வாகனங்களை அனுப்புவதும் அவர்கள் அர்பணிப்புடன் அந்த குப்பை மேட்டில் ஏறி நின்று அந்த புகை மண்டலத்திற்குள் தீயை அணைப்பதற்கு அர்பணிப்புடன் இடர் படுவதும் ஒரு தொடர்கதையாக மாறுகின்ற செயற்பாடாகவுள்ளது
நேற்று இரவு சுமார் 11 மணியளவில் கல்லூண்டாய் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக அங்கு சென்றபோது தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. முழுப் பகுதியும் புகை மூட்டத்தால் சூழப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கு இரவுக்காவலாளிகள் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினைத் தவிர யாழ்ப்பாணம் மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் அங்கு காணப்படவில்லை. ராணுவ வாகனங்களே உட் செல்லுகின்றன. ஒருவேளை குறித்த இடத்தினை பாதுகாப்பு பொறுப்பான்மை பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் வழங்கப்பட்டு விட்டதோ தெரியாது.
எது எப்படியோ மாநகர சபை இந்த விடயத்தில் மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த அலட்சியத்தின் விளைவுகளை தற்போது யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்கு வெளியே வாழும் பொதுமக்களே அதிகமாக அனுபவித்து வருகின்றனர். இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் மிக கடுமையான நெருக்கடியினை யாழ்.மாநகர மக்கள் எதிர்கொள்ளுவார்கள். ஏனெனில் இவ் பொறுப்பற்றதனத்தினால் இந்த பிரச்சினைகள் நீதிமன்றங்களின் கவனத்திற்குச் சென்று காக்கைத் தீவு அல்லது கல்லூண்டாய் போன்ற இடங்களில் கழிவுகளை கொட்டுவதற்கான தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் நிலை உருவானால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியது யாழ்ப்பாணம் மாநகர சபையும் மாநகர மக்களும்தான்.
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு முன்னர் யாழ்ப்பாணம் மாநகர சபை தனது பொறுப்புகளை உணர்ந்து கழிவகற்றல் முகாமைத்துவத்தில் உடனடி மற்றும் நிலையான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.
நேற்று …. காக்கைத் தீவு இன்று ……. கல்லூண்டாய் நாளை……??? யாழ்.மாநகர சபை பொறுப்புடன் செயற்பட வேண்டும்
வரதராஜன் பார்த்திபன்
முன்னாள் யாழ்.மாநகரசபை உறுப்பினர்
முன்னாள் சுகாதாரக்குழு தலைவர், யாழ்.மாநகர சபை