Ad Widget

நெல்லியடியில் புலிக்கொடி காட்டிய விவகாரம்; சந்தேகநபர்கள் இருவர் விசாரணைக்கு அழைப்பு

யாழ். நெல்லியடிப் பகுதியில் புலிக்கொடி காட்டிய விவகாரம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர் என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் நில சுவீகரிப்பு தொடர்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது மோட்டார் சைக்கிள்களில் வந்தோர் புலிக்கொடியை ஏந்தியவாறு வீதியில் வலம் வந்தனர். மேற்படி மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகடுகள் புலன் விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த இலக்கததகடுகளில் ஒன்று மோட்டார் சைக்கிளொகன்றுக்குரியது என்றும் மற்றையது முச்சக்கரவண்டியொன்றுக்கு உரியது என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மோட்டர் சைக்கிளின் இலக்கத் தகட்டின் அடிப்படையில் அதன் உரிமையாளர்கள் இருவர் இனம் காணப்பட்டுள்ளனர். இருவரும் தென்பகுதியைச் சேந்தவர்களாவர். ஒருவர் கொழும்பு 15ஐச் சேர்ந்தவர். மற்றைய நபர் ஜா – எல பகுதியைச் சேந்தவர். முஸ்லிம் மற்றும் சிங்கள இனத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரையும் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.

புலிக்கொடி காட்டியமை தொடர்பான வழக்கு பருத்தித்துறை நீதிமன்றத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி விசாரணை செய்யப்படவுள்ளதாக’ பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

Related Posts