Ad Widget

நெல்சிப் திட்டங்களை 6 மாதத்திற்குள் நிறைவு செய்யவும் – முதலமைச்சர்

vicky0vickneswaranவடமாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற நெல்சிப் வேலைத்திட்டங்களை எதிர்வரும் 06 மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பணித்துள்ளார்.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் வடமாகாண உள்ளூராட்சி சபைத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ். பொதுநூலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு பணித்துள்ளார்.

வடமாகாணத்தில் தாமதிக்கப்படும் வேலைத்திட்டங்களை உரியவர்களிடம் அனுமதி பெற்று எதிர்வரும் 06 மாதங்களுக்குள் நிறைவுசெய்து அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் அவர் பணித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டங்கள் தாமதிக்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் உலக வங்கியிலிருந்து நிதி பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்படலாம் எனவும் அவர் கூறினார்.

மேலும் இந்தச் சந்திப்பின்போது,

கடந்த வருடங்களில் உலக வங்கியால் வடமாகாண அபிவிருத்திக்காக நெல்சிப் மற்றும் புறநெகும திட்டங்களில் நிதி வழங்கப்பட்டது. குறித்த நிதியில் புறநெகும மற்றும் நெல்சிப் திட்டங்களினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் 2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், கடந்த வருடம் டிசெம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படாத நெல்சிப் வேலைத்திட்டங்களை முதலமைச்சர் இன்றைய கலந்துரையாடலில் ஆராய்ந்தார்.

வடமாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கு கடந்த 2011ஆம் 2012ஆம் 2013ஆம் ஆண்டுகளில் நெல்சிப் மற்றும் புறநெகும வேலைத்திட்டங்களுக்கு உலக வங்கியால் ஒதுக்கப்பட்ட நிதியில் நிறைவுபெற்ற வேலைத்திட்டங்கள், நிறைவுபெறாத வேலைத்திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சரினால் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது உள்ளூராட்சி சபைத் தலைவர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதி கிடைக்காத வேலைத்திட்டங்கள் குறித்து வடமாகாண முதலமைச்சரிடம் எடுத்துரைத்ததுடன், அனுமதி கிடைக்காத வேலைத்திட்டங்களே நிறைவு பெறாமல் இருப்பதாகவும் முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். அத்துடன் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உள்ளூராட்சிமன்றத் தலைவர்கள், செயலாளர்களின் தகைமைகள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்டவற்றையும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அதேவேளை தகைமைகள் அடிப்படையில் தலைவர், செயலாளர்கள் நியமிக்கப்பட்டாத காரணத்தினால் செயலாளர்கள் சில செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது, தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை. இதனால், உள்ளூராட்சி மன்றங்களில் பிரச்சினைகள் உருவாகுவதற்கு காரணமாக அமைகின்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த வகையில், தகைமைகள் அடிப்படையில் தலைவர்கள், செயலாளர்களை நியமிப்பதற்கு ஆவண செய்யுமாறும் முதலமைச்சரிடம் கோரிக்கையும் விடுத்தனர்.

இந்தச் சந்திப்பைத் தொடர்நது, உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குவதற்காக வடமாகாண உள்ளூராட்சி திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களை உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு வழங்கும் முகமாக வாகனங்களின் திறப்புக்களை முதலமைச்சர் கையளித்தார்.

Related Posts