Ad Widget

நெப்போலியனை நாடுகடுத்தும் ஏற்பாட்டுக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

கடந்த 2001ஆம் ஆண்டு யாழ்.ஊர்காவற்றுறை நாரந்தனை பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் மற்றும் மதன் என்று அழைக்கப்படும் நடராஜா மதனராசா ஆகியோரை இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

இவ்விருவரும் இங்கிலாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுசீட்டு இலக்கம் என்பவற்றை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணித்துள்ளார்.

யாழ். மேல் நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிபதி இவ் உத்தரவை பிறப்பித்தார்.

கடந்த 2001ஆம் ஆண்டு ஊர்காவற்றுறைக்கு தேர்தல் பரப்புரைக்கு சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது நாரந்தனை பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் படுகொலை செய்யப்பட்டதுடன் 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

சம்பவத்தின் குற்றவாளிகளாக யாழ். மேல் நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட நெப்போலியன், மதனராசா உள்ளிட்ட மூவருக்கு இரட்டை மரண தண்டனையும், 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப் பணமும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்திருந்தார்.

இவர்களில் நெப்போலியனும் மதனராசாவும் நாட்டில் இல்லாத காரணத்தால் அவர்களை கைதுசெய்வதற்கான சர்வதேச பிடிவிறந்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Posts