Ad Widget

நெடுந்தீவு சிறுமி கொலை தொடர்பான இணையச் செய்தியில் எதுவிதமான உண்மையும் கிடையாது: முன்னாள் எம்.பி.அலன்ரின்

நெடுந்தீவு சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சில இணையத்தளங்களில் வெளியாகிய செய்திகள் தொடர்பாக மீண்டும் ஒருமுறை விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய நிலையில் இவ்மறுப்பறிக்கையை வெளியிடுகின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் (உதயன்) குறித்த செய்தி தொடர்பாக விடுத்துள்ள ஊடகச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிருபா என்ற சந்தேக நபருடன் நானோ அல்லது எனது கட்சியோ இன்று வரையும் எந்தவிதமான தொடர்புகளையும் பேணியிருக்கவில்லை என்பதை நான் பல ஆதாரங்களுடன் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

எனினும் குறிப்பிட்ட இணையத்தளம் மீண்டும் குறிப்பிட்ட சந்தேக நபரை என்னுடன் தொடர்புபடுத்தி செய்தி எழுதுவது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்லாது எனது அரசியல் சார் நடவடிக்கைகளுக்கு பங்கம் ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

குறித்த இணையத்தின் இயக்குனர் குறிப்பிட்ட ஒரு கட்சி சார்பானவராக இருப்பதால் எனது பெயரை தொடர்ந்தும் அக்கொலையுடன் தொடர்புபடுத்தி எழுதுவது அவரது எத்தகைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கென எனக்குப் புரியவில்லை.

குறிப்பிட்ட சிறுமி எமது மதச் சார்பில் எனக்கு மகள் முறையானவர் என்பதால், அச்சிறுமிக்கு தந்தை நிலையிலுள்ள என்னை இச்சந்தேக நபருடன் தொடர்புடையவன் எனக் குறிப்பிடுவது மிகவும் கீழ்த்தரமானதொரு செயற்பாடாகவே அமைகின்றது.

தற்போது நீதிமன்ற விசாரணையிலுள்ள இச்சம்பவத்தை தங்களது சுயதேவைகளுக்காக விமர்சிப்பது அல்லது ஒருவரோடு ஒருவரை தொடர்புபடுத்துவது நீதியை அவமதிக்கும் செயலாகவே கருத வேண்டியுள்ளது.

சட்ட ஒழுங்குகள் முறையான ஒழுங்கில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், உண்மையும் நீதியும் விரைவில் வெளியேவரும். இந்தக்; கொலையுடன் சம்பந்தப்பட்டவர் தொடர்பான உண்மைகள் உறுதிப்படுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுதலும் பிரார்த்தனையுமாகும்.

நடந்து முடிந்த போரின் வடுக்களால் இன்னும் துயர்களிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் தமிழ் மக்களுக்காக நாம் ஆற்றிவரும் எமது நேர்த்தியான பணிகளை நேரடியாக கண்டும் கேட்டும் பட்டுணர்ந்து கொண்டுள்ள எமது மக்கள் இவ்வாறான பொய்வதந்திகளை ஒருபோதும் நம்பப் போவதில்லை.

உண்மைகளை வெளிக்கொணரவென நேர்மையுடன் பணியாற்றிவரும் ஊடகங்கள் இச்செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்து உள்ளதை உள்ளபடியே வெளியிட முன்வருவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts