Ad Widget

நெடுந்தீவில் கற்பக கானகத்திட்டம் ஈடுபட்ட மாணவர்களுக்குப் பரிசளிப்பு

நெடுந்தீவில் பனைவிதைகளை நடுகை செய்து பராமரிக்கும் கற்பக கானகத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்று வியாழக்கிழமை (12.01.2017) நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது. வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வைத்துள்ளார்.

கனடாவில் உள்ள நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் 2013ஆம் ஆண்டில் இருந்து நெடுந்தீவில் பாடசாலை மாணவர்கள் மூலம் பனைவிதை நடுகையை ஊக்குவித்து வருகிறது. 10,000 பனைகளை உருவாக்கும் நோக்கில் கற்பக கானகம் என்ற பெயரில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அவர்களால் நடப்படும் ஒவ்வொரு பனைவிதைக்கும் ரூபா 50 வீதம் வழங்கப்படும் எனவும், இதற்கு மேலதிகமாக நான்கு ஆண்டுகளின் பின்னர் நடப்பட்ட பனைவிதைகள் வளர்ந்திருந்தால் பனையொன்றுக்கு ரூபா 50 வீதம் வழங்கப்படும் எனவும் அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தது. இதுவரையில் ஏறத்தாழ எண்ணாயிரம் பனைவிதைகள் நடுகை செய்யப்பட்டுள்ளன.

பனைவிதைகளை நடுகை செய்த மாணவர்களுக்கான பணம் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தால் ஹற்றன் நாஷனல் வங்கியில் வைப்பில் இடப்பட்டு, வங்கி கணக்குப் புத்தகங்கள் பரிசளிப்பின் போது கையளிக்கப்பட்டுள்ளன. பரிசளிப்பு நிகழ்ச்சியில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனோடு, மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், கனடா நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த சு.கோவிந்தசாமி, சி.பரராஜசிங்கம், ஐ.சண்முகநாதன் மற்றும் நெடுந்தீவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் சாரதாதேவி கிருஸ்ணதாசன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

மேலும் படங்களுக்கு…

Related Posts