Ad Widget

நெடுந்தீவின் விவசாய சூழற்பாதிப்புகள் பற்றி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கள ஆய்வு.

நெடுந்தீவீன் விவசாயம், கால்நடைவளர்ப்பு, நீர்ப்பாசனம்,சுற்றுச்சூழல் தொடர்பான பிரச் சினைகள் பற்றியும் இவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் அறிந்து கொள்ளும் நோக்குடன் மேற்படி துறைகளுக்குப் பொறுப்பான வடக்கு மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புதன்கிழமை (13.11.2013) நெடுந்தீவில் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Ainkaranesan

அமைச்சருடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், வடமாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் கி.சிறிபாலசுந்தரமும் சென்றிருந்தனர். இவர்களுக்கு மாவலி இறங்கு துறையில் பெரும் வரவேற்பு வழங்கிய நெடுந்தீவு மக்கள் அதன் பின்னர் நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் இவர்களை அழைத்துச் சென்று,தாங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் எடுத்துக் கூறினார்கள்.

Ainkaranesan1

கடற்காற்றால் தரை உப்பேறுவதையும், நன்னீரை வழங்கிக் கொண்டு இருக்கும் சாராப்பிட்டிக் கிணறுகளும் அதிகப்படியான நீர் வெளியேற்றத்தால் உவராகிக் கொண்டிருப்பதையும், நன்னீர் உள்ள இடங்களில் மண்வளம் இல்லாது இருப்பதையும் மண்வளம் உள்ள இடங்களில் நன்னீர் இல்லாமல் இருப்பதையும், கடற்கரைகளில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வையும், கோடை காலங்களில் குதிரைகளும், மாடு, ஆடுகளும் குடிநீர் இல்லாமல் அவதிப்படுவதையும் முன்னுரிமை கொடுத்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளாகச் சுட்டிக்காட்டினார்கள்.

Ainkaranesan3

இந்த இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வை மேற்கொண்ட அமைச்சர் கடற்கரையோரத்தில் சவுக்கு மரங்களை வளர்த்துக் காற்றுத்தடுப்பு வேலி அமைப்பது. சாராப்பிட்டிப் பகுதியில் மழை நீரை தரைக்குக்கீழ் சேமிப்பது, அப்பகுதியைப் பசுஞ்சோலையாக மாற்றி நீர்ப்பிடிப்பை அதிகரிக்கச் செய்வது, சேதன வேளாண்மையை ஊக்குவித்து, நெடுந்தீவின் மண்வளத்தை உயிர்ப்பிப்பது, நெடுந்தீவில் சூழல்சார் சுற்றுலாவை ஊக்குவிப்பது போன்ற திட்டங்களின் சாத்தியப்பாடுகள் குறித்து விரைவில் ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துக் கேட்டுக்கொண்டார். இத்திட்டங்களுக்குப் புகலிட நாடுகளில் வாழும் நெடுந்தீவைச் சேர்ந்த மக்கள் உதவுவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Posts