Ad Widget

நூலகத்தினை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்: இந்திய துணைத் தூதரகம்

booksஇலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்தில் இயங்கும் பொது நூலகத்தினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய துணைத் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய தூதரக வளாகத்தில் உள்ள நூலகம் அமைந்துள்ளது. இந்நூலகத்தில் ஆங்கிலம், தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் அமைந்துள்ள 1000 இற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இவற்றில் இந்துமதம், சமயம், வரலாறு, தத்துவம், வெளிநாட்டுக் கொள்கைகள், யோகா, சாஸ்திரிய நடனம், சித்திரம் மற்றும் சமையற்கலை போன்ற பரப்புக்களில் அமைந்த 400இற்கும் அதிகமான தமிழ் நூல்களைக் கொண்டுள்ளதுடன், மேலும் சிறுதொகை ஆவணப்படம் மற்றும் குறுந்திரைப்பட இறுவட்டுக்களும் உள்ளன.

மேற்படி தூதரக நூலகத்தை பொதுமக்கள் அனைவரும் மு.ப 10.00 மணி முதல் பி.ப. 12.30 மணிவரையும் மற்றும் பி.ப. 2.30 மணி முதல் பி.ப. 4.30 மணிவரையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

நூல்கள் மற்றும் இறுவட்டுக்களை இரவல் எடுக்க விரும்புவோர் தூதரக நூலகத்தில் தம்மை அங்கத்தவராக பதிவு செய்யவேண்டும். பதிவுகளுக்காக மீளளிக்கப்படக்கூடிய வைப்புப் பணமாக ரூபா 500 செலுத்தப்படவேண்டும். நூலக அங்கத்துவத்தை தொடர விரும்பாதவிடத்து இரவலாக பெற்ற நூல்களையும், அங்கத்துவ அட்டையையும் மீளளித்து வைப்புப்பணத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.

நூலக அங்கத்துவ படிவங்களை தூதரகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பூரணப்படுத்தப்பட்ட படிவங்கள் விண்ணப்பதாரரின் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது பெயர், வயது மற்றும் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஏதாவதொரு சான்றிதழின் பிரதியுடன் சமர்ப்பித்து பெற்றுக்கொள்ள முடியுமென்றும் இலங்கைக்கான இந்திய துணைத்தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Posts