Ad Widget

நூறுநாள் வேலைத்திட்டத்தை இந்த ஆண்டிலும் முன்னெடுக்க வேண்டுமேன கூட்டுறவாளர்கள் அமைச்சர் ஐங்கரநேசனிடம் கோரிக்கை

கூட்டுறவு அமைச்சால் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட நூறுநாள் வேலைத்திட்டத்தைப்போன்று கூட்டுறவு அமைப்புகளின் அபிவிருத்தி கருதி இந்த ஆண்டும் நூறுநாள் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு கூட்டுறவாளர்கள் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூட்டுறவு அமைச்சர் ஐங்கரநேசனுக்கும் வடமாகாணத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (05.04.2016) கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

கடந்த ஆண்டு கூட்டுறவு அமைச்சால் முன்னெடுக்கப்பட்ட நூறுநாள் வேலைத்திட்டத்தின் மீளாய்வு தொடர்பாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போதே கூட்டுறவாளர்கள் இந்த ஆண்டும் அதுபோன்றதொரு திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளனர்.

கலந்துரையாடலில் கலந்துகொண்ட கூட்டுறவாளர்கள் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட நூறுநாள் வேலைத்திட்டத்தின் மூலம் தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகள் பற்றி எடுத்துக் கூறினார்கள். கூட்டுறவு அமைச்சால் அறிவிக்கப்பட்ட 30வீத சம்பள உயர்வை நடைமுறைப்படுத்தியமை, ஆளணி வெற்றிடங்களை நிரப்பியமை, புதிய ஆளணிக்கு அங்கீகாரம் கிடைத்தமை, பதவி நிர்ணயம் செய்யப்படாத பணியாளர்கள் பலருக்குப் பதவி நிர்ணயம் செய்தமை, பணியாளர்களின் பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு இணக்க சபைகளை உருவாக்கியமை போன்ற பல நல்ல விடயங்கள் நூறுநாள் வேலைத்திட்டத்தால் தங்களுக்கு கிடைத்ததாகப் பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.கூட்டுறவு அமைப்புகளை வினைத்திறனாக இயங்கச் செய்வதற்கு இன்னும் பலவற்றைச் செய்யவேண்டியிருப்பதால் நூறுநாள் வேலைத்திட்டத்தை மீண்டும் முன்னெடுப்பதற்கு அமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.

இதற்குப் பதலளித்த அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,கடந்த ஆண்டின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் பூரணப்படுத்தப்படாத விடயங்களுடன் வேறு எந்த எந்த விடயங்களை உள்ளடக்கலாம் என்று கூட்டுறவுத் திணைக்களத்தின் ஆணையாளர், உதவி ஆணையாளர்கள் போன்றவர்களுடன் ஆலோசித்து விரைவில் இத்திட்டத்தை முன்னெடுக்க ஆவன செய்வதாகத் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள் பொ.மோகன், உ.சுபசிங்க, கனகம்மா நல்லதம்பி, கு.இரவீந்திரநாதன், அ.செபமாலை ஆகியோருடன் ஐந்து மாவட்டங்களிலும் இருந்து பல்வேறு கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.

03

04

05

06

07

Related Posts