Ad Widget

நுணாவிலில் படைகளுக்கு காணி பறிப்பு அறிவித்தல்கள்

ARMY-SriLankaயாழ்.மாவட்டத்தில் மீண்டும் இராணுவமுகாம்களுக்கான காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. நுணாவிலில் இவ்வாறு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் 7 பேரும் அவற்றை இராணுவத்தினருக்கு வழங்குவதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது.

யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகம் திறக்கப்பட்டு இரண்டு மாத காலத்தினுள், இராணுவம் மற்றும் கடற்படைக்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மும்முரப்படுத்தப்பட்டிருந்தன.

இதன் பின்னர் குறித்த காணி சுவீகரிப்பு அலுவலர்கள் தமது பதவியில் இருந்து விலகி வெளியேறியிருந்தனர். இதனால் குறித்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் தாமதமடைந்திருந்தன. இதன் பின்னர் குறித்த நடவடிக்கைகளை அந்தந்தப் பிரதேச செயலாளர்களே முன்னெடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் கடந்த 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனாக பண்டார தென்னக்கோன், பாதுகாப்புத் தேவைக்காக இனிமேல் தனியார் காணிகள் சுவீகரிக்கப்படமாட்டாது என்று கூறியிருந்தார்.

அரச அதிபர்,பிரதேச செயலர்கள், படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். ஏற்கனவே சுவீகரிப்பு நடவடிக்கைகள் தொடங்கிய காணிகள் தொடர்பில் அமைச்சர் எதுவும் தெரிவித்திருக்கவில்லை.

குறித்த கூட்டத்தில் வைத்து, பிரதேச செயலாளர்கள் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கின்றார்கள் இல்லை என்று இராணுவ அதிகாரிகள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தனர்.அத்துடன் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் சுவீகரிக்கவேண்டிய தனியார் காணிகளின் பட்டியலும் பிரதேச செயலாளர்களுக்கு இந்தக் கூட்டத்தில் வைத்து வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய பிரதேச செயலாளர்கள், காணி சுவீகரிப்பு அலுவலர்களுக்கான ஒப்பத்தையிட்டுச் சுவீகரிப்பு அறிவித்தல்களை ஒட்டத் தொடங்கியுள்ளனர். இதற்கு உதவியாக ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் பட்டதாரிப் பயிலுநர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நுணாவில் சந்தியில் 5 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்காக அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த காணிகளுக்குரிய உரிமையாளர்கள் 7 பேர் தமது காணி ஆவணங்களுடன் வடக்கு முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது.

தொடர்புடைய செய்தி

அரச தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நஷ்டஈடு – தென்னக்கோன்

தனியார் காணிகளை சுவீகரிக்க அனுமதி வழங்க முடியாது – தென்னக்கோன்

Related Posts