நீர் அருந்துவதையும் நிறுத்தப்போவதாக தமிழ் அரசியல் கைதிகள் எச்சரிக்கை

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் நீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இவர்களை வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான, 6 வட மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட குழு நேற்று பார்வையிட்டு கலந்துரையாடியது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து இதுபற்றிக் கலந்துரையாடும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துமாறு வடமாகாணசபை உறுப்பினர்களின் குழு அரசியல் கைதிகளிடம் கோரியது. எனினும் அவர்கள் அதற்கு இணங்கவில்லை. அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களையும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 3 அரசியல் கைதிகளையும் வட மாகாணசபை உறுப்பினர்கள் இரண்டு பிரிவுகளாகச் சந்தித்து கலந்துரையாடினர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது போராட்டத்தை நிறுத்த மறுப்புத் தெரிவித்த அதேவேளை, தமது பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் தீர்வு வழங்கப்படாவிடின், நீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவசரமாகச் சந்தித்து நிலைமைகளை விளங்கப்படுத்தி, தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வடமாகாணசபை உறுப்பினர்களின் குழு திட்டமிட்டுள்ளது.

Related Posts