Ad Widget

நீதி விசாரணை தேவையில்லை என யாரும் சொல்ல முடியாது

“உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதோலோ அல்லது அத்தகைய உண்மை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படுவதாலோ, நீதி விசாரணை நடத்தப்படக் கூடாது, நீதி விசாரணை தேவையில்லை என்று எவரும் சொல்ல முடியாது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கமானது நீதி விசாரணைகளை மேற்கொள்ளாது உண்மை கண்டறியும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்திருக்கும் நிலையில் அது தொடர்பில் வினவிய போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “2015 இல் இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகள் வழங்கியது போன்று, செப்டெம்பர் 14 ஆம் திகதி,வெளிவவகார அமைச்சர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலே, உண்மை கண்டறியப்பட வேண்டும், நட்ட ஈட்டுக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும், மீளவும் இனி நிகழாமைக்கான உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்று உரையாற்றியிருந்தார்.

இந்த நான்கும் நடைபெற வேண்டும். இந்த நான்கிலே ஒன்று மற்றொன்றுக்கு மாற்றீடாக அமைய முடியாது. உண்மை கண்டறியப்பட வேண்டியது அத்தியாவசியமான விடயம்.

உண்மை கண்டறியப்பட வேண்டுமென்ற பொறிமுறை இருக்கிற காரணத்தினால், நீதி நடத்தப்படக் கூடாது என்று எவரும் சொல்லக் கூடாது. சொல்லவும் முடியாது. அல்லது இனி நிகழாமைக்கான உத்தரவாதம் தேவையில்லை என்றும் சொல்ல முடியாது.

உண்மை கண்டறிவதற்கான பொறிமுறை வந்தால் நாங்கள் அதனை வரவேற்போம். ஏனென்றால், அது அத்தியாவசியமான ஒரு செயற்பாடு. நிலைமாறு நீதியிலே இந்த நான்கு படிமுறைகளும் மிக மிக முக்கியமானவை. அதிலே முன்றாவதாக, நான் கூறிய நீதிமன்றப் பொறிமுறை அதாவது குற்றவாளிகளைத் தண்டித்து நீதி வழங்குகின்ற நீதிமன்றப் பொறிமுறையும் அதற்கு இணையாக, முக்கியமான இன்னொரு படிமுறையையும் செய்ததே ஆகவேண்டும்” என்றார்.

Related Posts